முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்துறை மந்திரியுடன் டெல்லி போலீஸ் கமிஷனர் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூன் 8 - டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை டெல்லி போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தா நேற்று சந்தித்து பேசினார். அப்போது ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் வெளியேற்றப்பட்டது குறித்து விளக்கி கூறினார். கறுப்புப்பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தார். கடந்த 4 ம் தேதி நள்ளிரவு அவரை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றினர். மேலும் ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த ராம்தேவின் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டு வீச்சு ஆகியவற்றையும் பிரயோகம் செய்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராம்தேவும் அவரது ஆதரவாளர்களும் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டது குறித்து சுப்ரீம் கோர்ட் விடுமுறை கால நீதிபதிகள் தாங்களாகவே முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர், டெல்லி மாநில தலைமை செயலாளர், டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த நோட்டீசிற்கு இரண்டுவார காலத்திற்குள் உரிய பதிலை தாக்கல் செய்யுமாறும் அவர்களை சுப்ரீம் கோர்ட் கேட்டுக்கொண்டது. இதையடுத்து மேற்கண்ட 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை டெல்லி போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தா சந்தித்து பேசினார். அப்போது யோகா குரு ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோரை ராம்லீலா மைதானத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டது குறித்த அறிக்கை ஒன்றை சிதம்பரத்திடம் பி.கே.குப்தா அளித்தார். ராம்தேவையும் அவரது ஆதரவாளர்களையும் ராம்லீலா மைதானத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் குறித்து அவர் அந்த அறிக்கையில் விளக்கியுள்ளார். 

அன்னா ஹசாரே இன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருப்பது குறித்தும் சிதம்பரத்துடன் குப்தா விவாதித்தார். அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு டெல்லி போலீசார் ஏற்கனவே அனுமதி மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony