முக்கிய செய்திகள்

சட்டப்பேரவையில் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி

புதன்கிழமை, 8 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 8 - தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. இருக்கிறது என்று மதுரையில் இருந்த எள்ளி நகையாடி சொல்லப்பட்டவர் எங்கே என்று பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பினார். நேற்று சட்டப்பேரவையில் கவர்னர் உரை மீது நன்றி தெரிவித்து, அ.தி.மு.க. உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:- முந்தைய ஆட்சியில் முன்னாள் முதல்வரின் குடும்ப வாரிசுகள் என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கேற்று தமிழகத்தை சீர்குலைந்து சின்னாபின்னாப்படுத்தினார்கள். 14-வது சட்டமன்ற பேரவை தேர்தலின் முடிவு என்பது தமிழகத்தில் யாருடைய ஆட்சி வரக்கூடாது என்பதற்காக அளிக்கப்பட்ட தீர்ப்பு அல்ல, ஜெயலலிதாவின் ஆட்சிதான் வரவேண்டும் என்பதற்காக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக வழங்கிய நல்ல தீர்ப்பு. ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள் மக்கள். 2006-ல் தமிழக மக்கள் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்காததின் காரணமாக ஜெயலலிதாவின் ஆட்சி அமையாமல் போனது. ஒரு மைனாரிட்டி சர்க்கார் அமைந்தது. 

குடும்ப ஆதிக்கம், அதிகார துஷ்பிரயோகம், அத்துமீறல்கள், அன்றைய அமைச்சர்களின் மீதே நீதிமன்ற வழக்குகள், கந்துவட்டி, கட்ட பஞ்சாயத்து, கஞ்சா, கள்ளச்சாரயம், கொலை, கொள்ளை மணல் திருட்டு, கற்பழிப்பு என தமிழகமே சந்தி சிரித்துக்கொண்டிருந்த சட்டம் ஒழுங்கு சீர்கேடு.

கடந்த ஆட்சிக்காலத்தில் இதே சட்டமன்றத்தில் அ.தி.மு.க. 60 சட்டமன்ற உறுப்பினர்களை பலவந்தமாக அவையிலிருந்து வெளியேற்றிவிட்டு, எதேச்சையாக சட்டமன்றத்தை நடத்த துணிந்தபோது, தனி ஒரு பெண்ணாக, பெண் சிங்கமாக சட்டமன்றத்திற்குள் நுழைந்து அன்றைய ஆட்சியாளர்களுக்கு கேள்வி கணையினை தொடுத்து வீர முழுக்கமிட்டதை யாரும் மறக்க முடியாது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலேயே சட்டத்தை பாதுகாப்பவர்களுக்கும், சட்டத்தை வழி நடத்துபவர்களுக்கும் இடையே முன் எப்போதுமே இந்திய வரலாற்றில் எந்த மாநிலத்திலுமே நடைபெறாத அளவிற்கு போர்களத்தைவிட மிக மோசமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுள்ள நிலைமை.

மேலும், சென்னை சட்டக்கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் போலீசாரின் கண்ணெதிரிலேயே அடி தடி சம்பவங்கள் அரங்கேறியதை அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

உயர்நீதிமன்ற வளாகத்திலே இருக்கின்ற காவல் நிலையமே தீவைத்து கொள்ளுத்தப்பட்ட கொடுமை, நீதி அரசின் மண்டையை நீதிமன்ற வளாகத்திலேயே உடைக்கப்பட்டு ஒருமாத காலம் உயர்நீதிமன்றம் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.

ஜனநாயகத்தின் குரல் வலையை நெரிக்கும அராஜகங்கள். 

மதுரை த.கிருட்டிணன் கொலை வழக்கின் முதல் குற்றவாளி அழகிரி பிறழ் சாட்சிகள் மூலம் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியுள்ளார். இந்த வழக்கில் மேலமுறையீடு செய்து குற்றவாளிகள் தண்டனை பெற தகுந்த மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குடும்பத்தில் யாருக்கு அதிக செல்வாக்கு என்று ஒரு நாளிதழில் கருத்து கணிப்பு வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக மதுரையில் அந்த பத்திரிகை அலுவலகம் பட்ட பகலில் மதுரை மேயர், துணை மேயர் மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்களால் தீவைத்து கொளுத்தப்பட்டது. அதில் இரண்டு இளம் பொறியாளர்கள், ஒரு காவலர் உட்பட மூன்று அப்பாவி உயர்கள் பலியாயின. அந்த கொடிய காட்சி அன்றைய தினம் ஒரு தொலைகாட்சியில் ஒளிபர்ப்பானது. புகார் கொடுத்த காவல்துறை அதிகாரியே பிறழ் சாட்சியாக மாறியதன் காரணமாக சட்டத்தின் பிடியிலிருந்து குற்றவாளிகள் தப்பித்துவிட்டனர். இந்த வழக்கை உரிய முறையில் மேல்முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுதரவேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

பனைவூர் இரட்டை கொலை வழக்கில் துப்பாக்கியால் சுட்ட கொலைக்காரன் காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்டான் என்று சொல்வதும், துப்பாக்கி  குண்டால் காயம்பட்ட பெண்மணி தன் உயிரை காப்பாற்றி கொள்ள குற்றுயிரும்  குலை உயிருமாக விமானம் பிடித்து வெளிநாடு சென்றது ஏன்? சொந்த நாட்டில் வாழ முடியாமல், வாழச்சென்ற நாட்டுக்காவது சென்று உயிரை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று ஓடியது எதனால்? இதன் மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட வேண்டும்.

திருநெல்வேலியில் அன்றைய அமைச்சர்களின் கண்னெதிரிலியே சட்டம் ஒழுங்கை கட்டி காக்கும் காவல் துறை உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடுமை.

உடுமலையிலே ஒரு டிஎஸ்பி-யை அவரது அலுவலகத்திலேயே அன்றைய ஆளும் கட்சியை சார்ந்த ஒரு நகரமன்ற தலைவர் அடித்து, மூக்கை உடைத்தது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சாலைமறியல், கடை அடைப்பு, கண்டன ஊர்வலம், சட்டமன்றத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் வெளிடநப்பு என மக்கள் மன்றமே கொதித்தெழுந்தும் அவர் மீது இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத கொடுமை.

இவ்வாரான கொடிய சம்பவங்களை கண்ட மக்கள் கொதித்து எழுந்து, தாயின் அரவனைப்புத்தான் தங்களுக்கு பாதுகாப்பு என்று ஜெயலலிதா வேண்டும் என்பதற்காக வழங்கப்பட தெளிவான தீர்ப்பு தான் இது. இந்திய ஜனாதிபதிக்கும், சாலை ஓரத்திலே குடியிருக்கும் சாதாரண குப்பனுக்கும் கப்பனுக்கும் வழங்கப்பட்டிருக்கின்ற வாக்குரிமை என்பது சரி சமமானது தான்.

திருமங்கலம் பார்முலா என்று சொல்லி பணபலம், படைபலம், ஊடகங்களின் பலம் ஆகியவற்றால் ஜனநாயகத்தின் குரல்வலையை நசுக்கி ஆட்சி அதிகாரத்தை 6-வது முறையாக கைப்பற்றிவிடுவோம் என்று மமதையாக எக்காலம் இட்டவர்களுக்கு, ஜெயலலிதா வேண்டுகோளை ஏற்று தமிழக மக்கள் மரண அடி கொடுத்திருக்கிறார்கள்.

ஆடு நனைகிறதே என்று ஓனாய் அழுத கதையை போல, 2011-க்கும் பிறகு அ.தி.மு.க. என்ற கட்சியை இருக்காது என்று மதுரையிலே  இருந்து எள்ளி நகையாடி எக்காலமிட்டார் ஒருவர். எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சிகேகே இந்த நிலையா? என்று நீலிக்கண்ணீர் வடித்த அந்த வீராதிவீரர், சூராதி சூரர், எங்கே?

ஆயுள் தண்டனை கைதிகளை விடுமுறையில் எடுத்து, சென்னை மாநகராட்சி, மதுரை மேற்கு, திருமங்கலம் ஆகிய இடைத்தேர்தல்களில் தேர்தல் பணியாற்ற சென்ற கழக தொண்டர்களின் மீது பல்வேறு உண்மைக்கு மாறான வழக்குகளை தொடுத்துத்தார்கள். முட்டிகள் உடைக்கப்பட்டது, மண்டை பிளக்கப்பட்டது. பயணம் செய்த வாகனங்கள் சுக்குநூராக்கப்பட்டது. வாக்காளர்களின் கையிலே ஒரு ஓட்டுக்கு மூவாயிரம் ஐயாயிரம், ஐந்தாயிரம் என திணிக்கப்பட்டு அவர்களின் கட்சிக்கு ஓட்டளிக்க குண்டர்கள் வைத்து மிரட்டப்ப்டடார்கள். மதுரை (மேற்கு) தொகுதி இடைத்தேர்லின்போது தீபாவளிக்கு கூட பட்டாசு வெடித்து பழக்கப்படாத என்மீது மதுரை முன்னாள் மேயர் குழந்தைவேலுவின் வீட்டின் மீது வெடிகுண்டு போட்டதாகவும், அவருடைய காருக்கு தீ வைத்தாகவும் வழக்கு பதியப்பட்டு அதில் என்னை முதல் குற்றவாளியாக சேர்த்தார்கள். இவ்வாரெல்லாம் செய்து இடைத்தேர்தல்களில் மாய வெற்றி பெற்றுவிட்டு, இது திருமங்கலம் பார்முலா என்று எக்காளமிட்டார்கள்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அன்றைய அமைச்சருடைய தொகுதியில் பத்தாயிரம் தாழ்த்தப்பட்ட வாக்காளர்களுக்கு டி.வி.எஸ் 50 வழங்க டோக்கன் வழங்கப்பட்டதில் அதில் 8 நபர்கள் மட்டுமே டிவிஎஸ் 50 எடுத்துச் சென்றார்கள். மற்றவர்கள் டோக்கன்களை அந்த இடத்திலேயே கிழித்துவிட்டு, மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை மலர வேண்டும் என்று வாக்களித்துள்ளார்கள்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் முறையாக பண விநியோகம் செய்திருப்பதாலும், எங்கள் இலவச திட்டங்கள் சென்றடையாத வீடுகளே இல்லை என்பதாலும் அதனால் உறுதியாக வெற்றி பெற்றுவிடுவோம் என்று முந்தைய ஆட்சியாளர்கள் அகம்பாவத்துடனும், ஆணவத்துடனும் பேசினார்கள்.

யோசித்து பாருங்கள். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், திருமங்கலம் தேர்தல் பார்முலா, இன்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் அந்தந்த ஆளுங்கட்சியினரால் அரங்கேற்றப்பட்டிருக்காதா? மக்களின் நியாயமான உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்காமல் போனால் வாக்குகள் விலைக்கு வாங்கும் அவலம் இந்தியா முழுவரும் அரங்கேறினால், அதன் தொடர் விளைவு என்னவாகியிருக்கும் என்று ஒரு கனம் யோசித்து பாருங்கள். அதன் பிறகு இந்தியாவின் ஜனநாயகம், காஷ்மீரைப்போல், அஸ்ஸாமைப்போல் சீர்குலைந்திருக்கும். இந்தியாவினுடைய இரையாண்மையே கேள்வி குறியாகியிருக்கும்.

அதன் பிறகு லட்சக்கான கோடிகளை கொள்ளையடித்து, அதில் சில ஆயிரம் கோடிகளை வாக்காளர்களுக்கு இனமாக கொடுத்து, ஐந்தாண்டு காலம் ஆட்சி அதிகாரத்தை குத்தகைக்கு எடுக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கும். அவ்வாறு இல்லாமல் ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்து தமிழகத்தில் நல்லாட்சி நிலவ வேண்டும் என ஜனநாயகத்தை நிலைநாட்டிய தமிழக வாக்காள பெருமக்களை இந்தியா மட்டுமல்லாது உலகமே பெருமையுடன் திரும்பி பார்க்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: