முக்கிய செய்திகள்

புது மாப்பிள்ளை அலங்காரத்தில் அருள்பாலித்த சுப்பிரமணிய சுவாமி

புதன்கிழமை, 8 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்,ஜூன்.- 8 - திருப்பரங்குன்றத்தில் நேற்று முன்தினம் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளி உள்ள சுப்பிரமணியசுவாமி புது மாப்பிள்ளை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  முருகப் பெருமான் குடிகொண்டுள்ள முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசங்கள், வல்லப கணபதி, கோவர்த்தானாம்பிகை விமான கலசங்களிலும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு மூலஸ்தானத்தில் எழுந்தருளி உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு புனித நீர் மூலம் மகா அபிஷேகம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து மூலவர் முருகப் பெருமானுக்கு மலர் கிரீடம், வெண் பட்டு, மனோரஞ்சிதம், வில்வம், செண்பகப் பூ மாலைகள் அணிவிக்கப்பட்டும், நெற்றியில் வைர நெற்றிப்பட்டை அணிவிக்கப்பட்டு புது மாப்பிள்ளை கோலத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த 2000 ம் ஆண்டில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக திருப்பணிகளின் போது மூலவர் முருகப் பெருமான் திருவுருவத்திற்கு நடந்த திருப்பணிகளில் முருகப் பெருமானின் திருமுகம் பெரிய அளவில் இருந்தது.
ஆனால் தற்போது நடைபெற்ற திருப்பணிகளில் முருகப் பெருமானின் முகம் குழந்தையின் முகம் போன்றும், சிரித்த முகத்துடனும், முகமும் அழகான தோற்றத்துடனும் அமைக்கப்பட்டிருந்தது. அழகென்ற சொல்லுக்கு முருகா என்பது போன்று முருகப் பெருமானின் திருமுகம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதை பார்க்கும் பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படை வீட்டில் முருகப் பெருமான் மணக்கோலத்தில் தெய்வானையுடன் எழுந்தருளி அருள் பாலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: