முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி அலைக்கற்றை வழக்கு தயாநிதி மாறனின் பதவி பறிபோகிறது

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      இந்தியா

புதுடெல்லி, ஜூன் - 9 -2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்போது அவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஒரு நிறுவனத்திற்கு சாதகமாக நடந்துகொண்டதாக தயாநிதி மாறன் மீது புகார் எழுந்துள்ளது. மேலும் பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அவர் தவறாக பயன்படுத்தியதாகவும் பழைய சர்ச்சை மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. இதுதவிர ஏர்செல் விவகாரம் தொடர்பாக அதன் முன்னாள் தலைவர் சிவசங்கரன் அளித்துள்ள சாட்சியத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய சி.பி.ஐ. தயாராகிவிட்டது. இதுதொடர்பாக பிரதமருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பிரதமரிடம் இருந்து இதற்கான அனுமதியை பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியுள்ளார். தயாநிதியை பதவியில் இருந்து நீக்க சோனியாகாந்தியும் அனுமதி அளித்துவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஏற்கனவே போர்க்கொடி உயர்த்தியுள்ளன. பிரதமர் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த விடப்போவதில்லை எனவும் எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் தயாநிதி மாறன் தானாகவே பதவியில் இருந்து விலக வேண்டும், அவ்வாறு பதவி விலகாவிட்டால் அமைச்சரவை மாற்றத்தின்போது அவர் நீக்கப்படுவார் என்று பிரதமரின் செயலர் டி.கே.நாயர் மூலம் தயாநிதி மாறனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்