முக்கிய செய்திகள்

சட்டபேரவையில் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      தமிழகம்

சென்னை, ஜூன்.- 8 - தமிழகத்தை ஒளியேற்ற வாருங்கள் என்று ஏங்கிய மக்களிடம் நம்பிக்கை பிறந்துள்ளது என்று சட்டப்பேரவையில் பொள்ளாசி ஜெயராமன் பேசினார். நேற்று சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:- பல கிராமத்து ஏழைத் தமிழர்கள் வாக்குகலை விலைபேச வந்தவர்களை பொதுமக்களே விரட்டியடித்து உள்ளார்கள். எனது தொகுதியில் நரிக்குறவர் காலனிக்கு வாக்களிக்க பணம் கொடுக்க சென்றவர்களை விரட்டியடித்த சம்பவம் அரங்கேறியது.
கிழந்த ஆடைகள், அழுக்குப் படிந்தவைகள், எளிய உருவங்கள், கரிய வடிவங்கள், கஞ்சிக் கலயங்கள், கீற்றுக் குடிசைகள், கல்லாமை துறைமுகங்கள், இல்லாமையின் உறைவிடங்கள் காலமும் உழைத்தே உண்ணுகின்ற அன்றாடம் காய்ச்சிகள், ஆளைப் பணியாளர்கள், பாரம் சுமப்போர், வண்டி இழுப்போர், வறுகடை விற்போர், மொத்தத்திலே, வறுமையின் கின்னங்கள், வசந்தங்கள் காணாத எளிமைகள் இவர்களுக்கான மக்கள் நல திட்டங்களுக்கு ஆளுநர் உரையில் முன்னுரிமை அளித்துள்ளது. அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் அரசியல்வாதி, அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிப்பவர் அரசியல் ஞானி  முதல்வர் அம்மா அரசு தொலை நோக்கு பார்வையுடன், வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கும், அதே முக்கியத்துவத்தை அளித்து தமிழகத்தை வளமான வளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்லும் என்று ஆளுநர் முதல்வரையும் அரசையும் பாராட்டியதற்கு இந்த அவையின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.
வரலாறு காணாத மின்வெட்டு, விண்ணோடும், முகிலோடும் விளையாடிய விலைவாசி உயர்வு, மணல் கொள்ளை என தமிழகமே இருண்டு போயிருந்த சூழ்நிலையினை மாற்றிட, இருண்ட தமிழகத்தை ஒளியேற்ற வாருங்கள் அம்மா என்று தமிழக மக்கள் ஏங்கி தங்களிடம் ஆட்சியை ஒப்படைத்துள்ளார்கள். மக்களிடத்திலே நம்பிக்கை ஒளி பிறந்திருக்கிறது.
கடந்த ஆட்சியில் கரண்டு இல்லை, சட்டம்-ஒழுங்கு சரியில்லே, திரைப்படங்கள் எடுக்க முடியலே அப்படியே எடுத்தாலும், திரையரங்குகளில் திரையிடமுடியலே. சொத்து வாங்க விற்க முடியலே. பத்திரப் பதிவு செய்ய முடியலே. வயதான முதியவர்களின் தனியாக குடியிருக்க முடியலே. பள்ளிக் குழந்தைகளை நிம்மதியாக பள்ளிகள் அனுப்ப முடியலே. காவல்துறையில் உள்ள உயர் அதிகாரி முதல் கீழ்மட்ட காவலர்கள் வரை கடமையினை சரிவர கவனிக்க முடியலே. அனைத்து அரசு துறைகளிலும், உயர் அதிகாரி முதல் கீழ் மட்ட பணியாளர்கள் வரை பணி நிம்மதியாக செய்ய முடியலே. கடந்த ஆட்சியே! மொத்தத்தில் முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லே. எனவே மக்களின் ஓட்டும் இல்லை என்று மரண அடி கொடுத்துள்ளார்கள்.
தனிப்பட்ட ஒரு குடும்பம் கேபிள் டி.வி. இணைப்பின் மூலம் ஆண்டிற்கு ஆயிரம் கோடி ரூபாயினை கொள்ளையடிப்பதை தடுத்தி நிறுத்திட, அரசு கேபிள் டி.வி.யை புதுப்பித்தல், உள்ளூர் கேபிள் டி.வி. இயக்குபவர்கள் பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டி.வி. சேவை அரசுடமையாக்கும் திட்டம், புரட்சிகரமான திட்டமாகும். கடந்த ஆட்சியில் அரசு கேபிள் டி.வி.க்கு எவ்வளவு மூலதனம் போடப்பட்டது. விலை மதிப்பு மிக்க வாங்கிய உபகரணங்கள் என்ன ஆயிற்று. நஷ்டத்திற்கு யார் பொறுப்பு?
கடந்த அம்மா ஆட்சி காலத்தில் மிகை மின் மாநிலமாக இருந்த தமிழகம், கடந்த தி.மு.க. ஆட்சியில் வரலாறு காணாத மின்வெட்டு மாநிலமாக மாறியது. இதற்கு காரணம், ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு ஆகும். எதிர்கால கூடுதல் மின் தேவையை கணக்கிட்டு நீண்டகால மின் செயல்முறை திட்டங்கள் வகுக்கப்பட்டு, தொழில் துறைகள் மற்றும் பிற துறைகளுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்தல், மின் திருட்டை தடுத்து மின் இழப்பை குறைத்தல், சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல், காற்றாலை மின் உற்பத்தியை முழுமையாக பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் நல்ல வளர்ச்சிக்கு அறிகுறியாகும். ஒரு நம்பகத் தன்மையுள்ள மாற்று எரிபொருள் ஆதாரமாக, மரபு சாரா எரிசக்தியான காற்று, சூரிய ஒளி மற்றும் உயிரி எரிபொருள் மூலம் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அரசு முன்னுரிமை வழங்கும் என்ற வைர வரிகள் பாராட்டத் தக்கதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: