முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் பக்தர்கள் மீது லாரி ஏறி 18 பேர் பலி

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ஆமதாபாத்,ஜூன்.10 - சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது தறிகெட்டு சென்ற லாரி ஏறியதில் 9 பெண்கள் உட்பட 18 பேர் பலியானார்கள். குஜராத் மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் தோல்கா பஹோதரா நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலையில் இந்த சம்பவம் நடந்தது. பெஹாவா கிராஸ் ரோட்டில் சாலையோரம் இந்த பக்தர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது எமனாய் வந்த லாரி அவர்கள் மீது ஏறியதில் 9 பெண்கள் உட்பட 18 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். 10 பேர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறிய போது, தறிகெட்டு வந்த லாரி தனது கட்டுப்பாட்டை இழந்ததால் பக்தர்கள் மீது ஏறி இப்படி ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 16 பேர் சம்பவ இடத்திலும், 2 பேர் மருத்துவமனையிலும் பலியானார்கள். ஆமதாபாத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள தோல்கா கிராமத்தில் தர்ஹாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவர்கள் போய்க் கொண்டிருந்தனர். 

ஆனால் வழியிலேயே விதி விளையாடி விட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஆமதாபாத்திலும், தோல்கா நகரிலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் மீது ஏறி அவர்கள் உயிரை பலி வாங்கிய லாரி,  மத்திய பிரதேசத்தில் இருந்து வந்ததாம். ராஜ்கோட்டுக்கு இந்த லாரி போய்க் கொண்டிருந்தது. வழியில் குஜராத் மாநிலத்தில் 18 பேரை பலி கொண்டு விட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோக அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் குஜராத் முதல்வர் மோடி அதிர்ச்சியடைந்தார். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்