முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.வி.எல். வாலிபால் போட்டி: சென்னை ஸ்பைக்கர்ஸ் முதலிடம்

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜூன், 10 - ஐ.வி.எல். லீக் வாலிபால் போட்டியில் சென்னையில் நடந்த 2 சுற்று ஆட்டத்தில் சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய வாலிபால் சம்மேளனத்தின்(வி.எப்.ஐ.) சார்பில் ஐ.வி.எல். எனப்படும் இந்திய வாலிபால் லீக் போட்டிகள் இந்த ஆண்டு முதன்முதலாக துவங்கி நடத்தப்பட்டு வருகிறது. 

மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் தலா இரு முறை மோதும். இதன் முதல் சுற்று போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் மராத்தா வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

ஐ.வி.எல். போட்டியின் 2வது சுற்று லீக் போட்டிகள் சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. கடந்த 4ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் 10 போட்டிகளில் விளையாடிய பின்னர், சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி, மராத்தா வாரியர்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 6 வெற்றிகள், 4 தோல்விகள் கண்டு 16 புள்ளிகள் பெற்றன.  எனவே, இதில் எந்த அணி முதலிடம் என்பதை நிர்ணயிக்க இரு அணிகளும் வென்ற செட்டுகள், தோற்ற செட்டுகள் கணக்கிடப்பட்டதில் சென்னை அணி 23 செட் வெற்றியும், 16செட் தோல்வியும் கண்டு முதலிடம் பிடித்தது. மராத்தா வாரியர்ஸ் அணி 2வது இடம் பிடித்தது.

யானம் டைகர்ஸ் அணி 3வது இடமும், ஹைதராபாத் சார்ஜர்ஸ் அணி 4வது இடமும், கேரளா கில்லர்ஸ் அணி 5வது இடமும், கர்னாடகா புல்ஸ் அணி 6வது இடமும் பிடித்தன.

போட்டிகளின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய வாலிபால் சம்மேளன தலைவர் பா.சிவந்தி ஆதித்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.

இந்த பரிசளிப்பு விழாவில் கஸ்டம்ஸ் கமிஷனர் சி.ராஜன்,  துணை கமிஷனர் தமிழ்வேந்தன்,  தமிழக அரசின் முதன்மை செயலாளரும், உப்பு கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குனருமான டேவிதார், தமிழ்நாடு அத்லடிக் சங்க தலைவர் தேவாரம், இந்திய வாலிபால் சம்மேளன செயலாளர் கே.முருகன், நடிகர்கள் விஷால், மதன்பாப், சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி உரிமையாளரும் கால்ஸ் டிஸ்டிலரீஸ் நிர்வாக இயக்குனருமான வாசுதேவன், பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் சக்திகுமார்,  அடையாறு ஆனந்தபவன் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ்வர் ராஜ், கஸ்டம்ஸ் சூப்பிரண்டு ஆர்.நடராஜன், போட்டி ஒருங்கிணைப்பு குழு செயலாளர் ஏ.கே.சித்திரைப்பாண்டியன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த போட்டியில் கர்நாடக புல்ஸ் வீரர் சஞ்சய்குமார்(சிறந்த யூனிவர்சல்), சென்னை ஸ்பைக்கர்ஸ் வீரர் கபில்தேவ்(சிறந்த செட்டர்), மராத்தா வாரியர்ஸ் வீரர் அஜீஸ்(சிறந்த பிளாக்கர்), ஹைதராபாத் சார்ஜர்ஸ் வீரர் வினோத் நெகி(சிறந்த லிபரோ), யானம் டைகர்ஸ் வீரர் ஜான் கிறிஸ்டோபர்(சிறந்த அட்டாக்கர்) விருதுகளும், போட்டித்தொடரின் சிறந்த வீரருக்கான விருதை கேரளா கில்லர்ஸ் அணி வீரர் நவீன் ராஜா ஜேக்கபும் பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்