முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை - சென்னைக்கு துரந்தோ ரயில் அறிமுகம்

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி,பிப்.26 - ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்தால் இனி 50 சதவீதம் மலிவாக இருக்கும். இத்தகவலை மம்தா பானர்ஜி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று 2011 - 12 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பயணிகளுக்கான கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. சரக்கு கட்டணமும் உயர்த்தப்படவில்லை. தொடர்ந்து 3 வது ஆண்டாக ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட் மூலம் 56 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

இவற்றில் எங்குமே நிற்காத 9 துரந்தோ ரயில்களும் அடங்கும். இத்தகவலை மம்தா பானர்ஜி தனது பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். 2 சதித் திட்ட சம்பவங்களால் கடந்த ஆண்டு ஏராளமான உயிர்கள் பலியாகி விட்டன என்றும் மம்தா வருத்தத்துடன் தெரிவித்தார். இது போன்ற சம்பவங்களை வருங்காலத்தில் தவிர்க்க மேலும் 3 டிவிசன்களில் மோதல் தடுப்பு கருவிகள் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். 

அடுத்த நிதியாண்டுக்குள் அனைத்து ஆளில்லா லெவல் கிராசிங்குகளும் மூடப்பட்டு விடும் என்றும் அவர் அறிவித்தார். தற்போது ரயில் விபத்து விகிதம் 0.29 சதவீதத்தில் இருந்து 0.17 சதவீதமாக குறைந்து உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். குளிர்சாதன பெட்டிக்கான புக்கிங் கட்டணங்களும், ஏ.சி. அல்லாத இருக்கைகளுக்கான கட்டணங்களும் 50 சதவீதம் குறைக்கப்படுவதன் மூலம் இனிமேல் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மலிவாக இருக்கும் என்றும் மம்தா அறிவித்தார். 

உடல் ஊனமுற்றோருக்கான சலுகைகள் நீட்டிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மூத்த குடிமக்களுக்கு அவர்கள் பெண்களாக இருக்கும் பட்சத்தில் குறைந்த பட்ச வயது வரம்பு 60 - லிருந்து 58 ஆக குறைக்கப்படுவதாகவும் மம்தா அறிவித்தார். மூத்த குடிமக்கள் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான சலுகை 10 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் அதிகரிக்கப்படுவதாகவும் மம்தா அறிவித்தார். 200 புதிய மார்க்கங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் அறிவித்தார். 3 புதிய சதாப்தி ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. புனே - செகந்திராபாத், ஜெய்ப்பூர் - ஆக்ரா,  லூதியானா - டெல்லி மார்க்கங்களில் சசாப்தி ரயில்கள் விடப்படும்.  அலகாபாத் - மும்பை, புனே - அகமதாபாத், ஷீல்டா - பூரி, மதுரை - சென்னை, சென்னை - திருவனந்தபுரம், மும்பை சென்ட்ரல் - டெல்லி மார்க்கங்களில் எங்கும் நிற்காத துரந்தோ ரயில்கள் விடப்படும் என்றும் அவர் அறிவித்தார். 

சென்னைக்கு 9 கூடுதல் ரயில்கள் விடப்படும் என்றும் அவர் அறிவித்தார். மும்பை புறநகர் பிரிவுக்கு 47 கூடுதல் ரயில்கள் விடப்படும் என்றும் மம்தா அறிவித்தார். ரயில் நிலையங்களில் ட்ரோலிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மம்தா அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்