முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் மன்மோகன் முடிவு

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.- 11 - மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்துள்ளார். மத்திய அமைச்சர்கள் வெளிநாடு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது. மத்திய அமைச்சரவையிலும், காங்கிரஸ் கட்சியிலும் சில மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் சில நாட்களாக விவாதித்து வருகின்றனர். அதனடிப்படையில் விரைவில் சில மாற்றங்களை கொண்டு வருவது என அவர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். 

கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவிதான் என்ற அடிப்படையில் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத் முதல் வாஸ்னிக் உள்ளிட்டோர் அமைச்சர்களாகவும், மாநில பொறுப்பாளர்களாகவும் நீடித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏதாவது ஒரு பொறுப்பு மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

பல்வேறு மாநிலங்களில் கட்சி தலைவர்களை மாற்ற வேண்டியிருப்பதை கருத்தில் கொண்டு உரிய மாற்றங்களை கொண்டு வர சோனியா ஆலோசித்து வருகிறார்.

அதைப் போல் மத்திய அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டு வர பிரதமர் மன்மோகன்சிங்கும் முடிவு செய்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவர் வகித்த ரயில்வே அமைச்சகத்துக்கு ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டும். அந்த பதவி மம்தாவின் திரிணாமுல் காங்கிரசுக்கு கிடைக்கும் என்பது உறுதியாகி விட்டது. அது மட்டுமின்றி, சில அமைச்சர்களின் பதவிகளை பறிக்க பிரதமர் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. பலரது துறைகள் மாறும் என்றும் பிரதிநிதித்துவம் இல்லாத மாநிலங்களுக்கு உரிய இடம் கிடைக்கும் என்றும் தெரிகிறது. 

இத்தகைய பின்னணியில் மத்திய அமைச்சர்கள் வெளிநாடு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் சிக்கியுள்ளதை தொடர்ந்து அவர் தானாகவே பதவி விலகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் விலகாவிட்டால் பதவியில் இருநது அவர் நீக்கப்படலாம் என்றும் டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்