முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டுத்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள்-அமைச்சர் சிவபதி தகவல்

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 11 - தமிழகத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த பல புதிய திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா பரிசீலித்து வருகிறார். அவருடைய ஒப்புதலுடன் வெளியிடப்படும் திட்டங்கள் மூலம் சர்வதேச வீரர்கள் தமிழகத்தில் உருவாவார்கள் என அமைச்சர் சிவபதி கூறினார். தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள என்.ஆர்.சிவபாதி, விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு அமைச்சர் சிவபதி தலைமை தாங்கினார். விளையாட்டுத்துறை செயலாளர் சாந்தினி கபூர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் சத்யபிரதா சாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்தும் மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்களது மாவட்டத்தில் விளையாட்டு துறையின் வளர்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், இனிமேல் செய்து தரவேண்டிய வசதிகள் குறித்தும் விளக்கி கூறினர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கவனமுடன் கேட்ட அமைச்சர் சிவபதி, பின்னர், அதிகாரிகளிடம் பேசும்போது கூறியதாவது:

தமிழகத்தில் விளையாட்டு துறைக்கு கூடுதலாக நிதி சேர்க்கும்பொருட்டு, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு ஸ்பான்சர்களை அணுகி நிதி திரட்டி, அதன்மூலம் விளையாட்டு போட்டிகளும், கட்டுமான பராமரிப்புகளும் மேற்கொள்ளப்படும். அதே போல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தமது நிதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை விளையாட்டு வளர்ச்சிக்காக செலவிட வேண்டும் என்ற கோரிக்கையும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

அதே போல் தமிழகத்தில் பல இடங்களில் பயிற்சியாளர்கள் பற்றாக்குறை இருப்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய பயிற்சியாளர்கள் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் சில இடங்களில் நீச்சல் குளங்களில் ஏற்பட்டுவரும் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும்பொருட்டு, அனைத்து  நீச்சல் குளங்களிலும் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தப்படும். 

பல மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் விளையாட்டு கட்டுமானப்பணிகளை விரைவு படுத்த வேண்டும். 

தமிழகத்தில் கடந்த முறை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது சீருடை பணியாளர்களுக்கான பணியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது தி.மு.க. ஆட்சியில் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுவிட்டது. இப்போது இதனை மீண்டும் 10 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

அதே போல் தமிழகத்தில் அரசு துறைகளில் பணியிடங்களை பூர்த்தி செய்யும்போது விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்தும் முதலமைச்சரின் பரிசீலனைக்கு கொண்டு செல்லப்படும்.

தமிழகத்தில் பல புதிய திட்டங்களை அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா பரிசீலித்து வருகிறார். இதன் மூலம் விளையாட்டுத்துறையில் மேலும் நல்ல முன்னேற்றம் கண்டு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கக்கூடிய அளவுக்கு  சர்வதேச வீரர், வீராங்கனைகளை  உருவாக்க முடியும்.

இவ்வாறு அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்