முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் பள்ளிக் கட்டணம் நாளை வெளியிடப்படும்: நிர்ணயக்குழு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜூன்- .12 - மேல்முறையீடு செய்துள்ள 6,400 தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரம் நாளை வெளியிடப்படும் என்று கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. பள்ளிக் கட்டணம் நிர்ணயம் தொடர்பான விவரங்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்றும் அவர்கள் மூலம் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணய விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் குழு அறிவித்துள்ளது.  தமிழகத்தில் உள்ள 10,954 பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு கடந்த ஆண்டு மே மாதம் கட்டண நிர்ணயம் செய்தது. அதன்படி பள்ளிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 11 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதை எதிர்த்து 6,400 பள்ளிகள் கட்டண குழுவிடம் மேல்முறையீடு செய்தன. மேல்முறையீடு செய்த பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்றும், மேல்முறையீடு செய்த பள்ளிகளுக்கு கட்டண மறு நிர்ணயம் செய்த பிறகு அவர்கள் புதிய கட்டணத்தை வசூலிக்கலாம் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நவம்பர் 15 முதல் மே 4 வரை மேல் முறையீடு செய்த பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியது. இந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன் மேல்முறையீடு செய்த பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பதற்காக குழுவினர் தீவிரமாக பணியாற்றி வந்தனர். மறு கட்டண விவரங்கள் தொடர்பாக நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது.
ஒவ்வொரு பள்ளியும் வினாப் பட்டியலில் அளித்த விவரங்கள், மேல்முறையீடு செய்த போது அளித்த விவரங்கள், நேர்முக கேட்பின் போது அளித்த விவரங்கள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து தணிக்கையாளர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டன. அதன் பிறகு இந்த பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை வெளியிட தமிழக அரசு ஒப்புதலையும் வழங்கியுள்ளது. இதையடுத்து நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையில் பள்ளிக் கல்வி இயக்குனர், மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆகியோர் கொண்ட கட்டண நிர்ணய குழு கூடியது.
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கட்டண நிர்ணய விவரங்கள் நாளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு இந்த விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் என மேல்முறையீடு செய்த அனைத்து வகை பள்ளிகளுக்கும் கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள வசதிகளின் அடிப்டையில் கட்டண நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, வரவு, செலவு கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்