முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமருடன் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு

புதன்கிழமை, 15 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, ஜூன் 15 - புதுடெல்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கொடுத்தார். அதை பிரதமர் மன்மோகன் சிங் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 13 ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற்றது. அதோடு மட்டுமல்லாது அ.தி.மு.க. 147 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதனையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா 3-வது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். பதவி ஏற்றவுடன் பல்வேறு அவசர வேலைகள் இருந்ததாலும் தமிழக சட்டசபை நடந்துகொண்டிருந்ததாலும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க அவர் உடனடியாக டெல்லி செல்ல இயலவில்லை. 

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரண்டு நாள் பயணமாக முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்றார். சென்னையில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டபோது அவருக்கு விமான நிலையத்தில் அ.தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் திரளாக வந்திருந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவுடன் நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் உடன் சென்றனர். தமிழக தலைமை செயலாளரும் உடன் சென்றார்.  

முதல்வர் ஜெயலலிதா நேற்றுமுன்தினம் பிற்பகல் டெல்லிபோய் சேர்ந்தார். டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய ஜெயலலிதாவை, அ.தி.மு.க. அமைச்சர்கள், நாடாளுமன்ற இருசபைகளின் அ.தி.மு.க. எம்.பி.க்கள், நிர்வாகிகள் மற்றும் டெல்லிவாழ் தமிழர்கள் ஆகியோர் திரண்டு மேளதாளம் முழங்க வரவேற்றனர். பின்னர் டெல்லியில் உள்ள சாணக்கியபுரத்தில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்திற்கு ஜெயலலிதா வந்தார். அங்கு அவருக்கு தமிழக காவல்துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதனை முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் ஜெயலலிதாவை டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், வலது கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா மற்றும் நாடாளுமன்ற இருசபைகளின் அ.தி.மு.க. உறுப்பினர்கள், மத்திய அரசில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த மத்திய ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். 

இந்த சந்திப்புக்கு பின்னர் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் ஜெயலலிதா சந்தித்தார். மரியாதை நிமித்தமாக மன்மோகன் சிங்கிற்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்தார். அதை மகிழ்ச்சியுடன் மன்மோகன் சிங் பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின்போது தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கொடுத்தார். தமிழகத்தில் தி.மு.க. மைனாரிட்டி ஆட்சி இருந்தபோது மின்சார உற்பத்தியை பெருக்காததால் தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவுகிறது. இதனால் விவசாயம், தொழில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை போக்கும் வகையில் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு உடனடியாக 1000 மெகாவாட் மின்சாரம் தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். மேலும் கடலில் மீன்பிடிக்கப்போகும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பெரும் துயரத்திற்கு ஆளாகிறார்கள். இதை தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் ஜெயலலிதா கூறியுள்ளதாக தெரிகிறது. தமிழக பட்ஜெட் கூட்டம் அடுத்தமாதம் கூடுகிறது. இதில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஜெயலலிதா அறிவிக்கலாம். அந்த வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரியும் மனுவில் கூறியிருக்கலாம் என்று தெரிகிறது. ஜெயலலிதா கொடுத்த மனுவை பிரதமர் மன்மோகன் சிங் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு தமிழகத்திற்கு தேவையான உதவிகளை அளிக்க உறுதி அளித்ததாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony