முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கப்பல் போக்குவரத்து எதிர்ப்புக்கு மனித நேய மக்கள் கட்சி வரவேற்பு

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் ஜூன் 16, இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி- கொழும்பு இடையே புதிய கப்பல் போக்குவரத்து துவக்கப்பட்டிருப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு கொடுத்திருப்பதை வரவேற்பதாக மனித நேய மக்கள் மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

மனித நேய மக்கள் கட்சி தலைவரும் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. வுமான ஜவாருஹிருல்லா ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை நமது மீனவர்களுக்கு பெற்றுத்தர வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் வரவேற்புக்குரியது. கடந்த திமுக ஆட்சியில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்கப்பட்ட போதும் திமுக அரசு இதுபோல தீர்மானம் நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தவில்லை. ஆனால் பதவியேற்ற ஓரிரு வாரங்களிலேயே வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் தூத்துக்குடி- கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்து துவக்கப்பட்டதற்கு முதல்வர் கண்டனம் தெரிவித்தது வரவேற்புக்குரியது.

தமிழக சட்டமன்றத்தில் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதை வலியுறுத்தியும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியதை ஏளனமாக விமர்ச்சித்துள்ள சுப்ரமணியன் சுவாமிக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த ஆட்சியில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வாங்குவதற்காகத் தான் டெல்லி செல்வார். ஆனால் இப்போது டெல்லி சென்ற முதலமைச்சர் ஜெயலலிதா முழுக்க முழுக்க தமிழக நலன்களுக்காகவே குரல் கொடுத்துள்ளார்.

என் மீது திமுக ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக தூண்டுதலின் பேரில் சி.பி.ஐ.யும் வருமான வரித்துறையும் பொய்வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் என்மீது குற்றம் எதுவும் இல்லை என்று நிரூபித்து விரைவில் உண்மை வெளிவரும்.

ராமநாதபுரம்,கீழக்கரை பாதாள சாக்கடை திட்டங்கள் விரைவில் நிறைவடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சிவகங்கைக்கு மாற்றப்பட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் மீண்டும் ராமநாதபுரத்திலேயே செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் உடன் இருந்தார்.

 

மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கு ரூ 4.5 லட்சம் செலவில் இருசக்கர வாகனங்கள் ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்

ராமநாதபுரம் ஜூன் 16, மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கு ரூ 4.5 லட்சம் செலவில் மோட்டார் சைக்கிள்களை மாவட்ட கலெக்டர் அருண் ராய் வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கு தலா ரூ 36 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்களை  மாவட்ட கலெக்டர் அருண்ராய் நேற்று மாலை வழங்கினார். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தங்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்