முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்ணாவிரதம் - மத்திய அரசுக்கு ஹசாரே எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.17 - பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்குவேன் என்று மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஊழலை ஒழிக்க செய்யும் வகையில் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றக்கோரி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரபல சமூக சேவகரும் காந்தீயவாதியுமான அன்னா ஹசாரே டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதனால் அதிர்ந்துபோன மத்திய அரசு லோக்பால் மசோதாவை வரும் மழைக்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற சம்மதித்தது. மேலும் லோக்பால் வரைவு மசோதா தயாரிக்க ஒரு கமிட்டியையும் மத்திய அரசு நியமித்தது. இந்த கமிட்டியில் அன்னா ஹசாரே உள்பட 5 சிவில் உறுப்பினர்களும் மத்திய அரசு சார்பாக பிரணாப் முகர்ஜி தலைமையில் 5 உறுப்பினர்கள் இடம் பெற்றனர். இந்த கமிட்டியின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. பிரதமரையும் லோக்பால் மசோதாவுக்குள் கொண்டுவருவது தொடர்பாக கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. 

இந்தநிலையில் அன்னா ஹசாரே நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் லோக்பால் மசோதா விவகாரத்தில் மத்திய அரசு தந்திரமாக செயல்படுகிறது. பலமான லோக்பால் மசோதா கொண்டுவந்து அதை வரும் குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றாவிட்டால் நான் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொள்வேன் என்று கடுமையாக எச்சரித்தார். லோக்பால் மசோதாவில் கூறப்பட்டுள்ள இரண்டு முக்கியமான வரிகள் குறித்து மத்திய அரசின் பரிசீலனைக்கு கமிட்டி அனுப்பியிருப்பது ஏன் என்று ஹசாரே கேள்வி எழுப்பியுள்ளார். பலமான லோக்பால் மசோதாவாக இருந்தால் மீண்டும் போராட்டம் வெடிக்கும். கொடுத்த உறுதி மொழியில் இருந்து மத்திய அரசு பின்வாங்குவதாக தெரிகிறது. அதனால் ஜந்தர் மந்தர் போராட்டத்தை மீண்டும் பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படும். லோக்பால் வரைவு மசோதா கமிட்டி ஏற்கனவே 6 முறை கூடி விவாதித்துள்ளது. 6 முறை கூடிய பின்பு துணை கமிட்டி அமைக்க வேண்டிய தேவை இல்லை என்று ஹசாரே மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்