முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன், 18 - கல்வி கட்டண கொள்ளையை தடுக்க தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும், பிளஸ் 2 வரை கட்டாயக்கல்வி வழங்கவேண்டும் என ராமதாஸ் கூறினார். தனியார் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் கட்டண உயர்வை கண்டித்து தமிழக மாணவர் சங்கத்தின் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் துவங்கி வைத்து பேசியதாவது:

அந்த காலத்தில் அரசுப்பள்ளிகளில் படித்தவர்கள் தான் ஜனாதிபதிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், பல உயரிய பொறுப்புகளில் பதவிக்கு வந்தனர். காமராஜரின் ஆட்சிக்கு பிறகு நர்சரி பள்ளி, மெட்ரிக்குலேஷன் பள்ளி எப்படி உருவானது?  ஏழைகள், பணக்காரர்களுக்கு என்று கல்வி பிரிக்கப்பட்டது எப்படி? கல்விக் கட்டண கொள்ளைக்கு துணை போனவர்கள் ஆட்சியாளர்கள் தான்.

இப்போது நடைபெறும் கல்வி கட்டணக் கொள்ளையை தடுக்க ஒரே வழி பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அவசர சட்டத்தின் மூலம் அரசுடமை ஆக்க வேண்டும். அரசே அனைவருக்கும் தரமான கல்வியையும்,  கட்டணம் இல்லாத கல்வியையும், கட்டாய கல்வியையும் கொடுக்க வேண்டும். பிளஸ் 2 வரை கட்டாயக்கல்வியை அரசே வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தர்ம சிந்தனையோடு லாப நோக்கம் இல்லாமல் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறோம் என்று ஒருவர் கூட சொல்ல முடியாது. வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அரசு அவசர சட்டம் கொண்டுவந்து, பள்ளிகளை அரசுடமை ஆக்க வேண்டும்.

பாட்டாளி மாணவர்கள் சங்கத்தினர் அரசே கல்வி கொடு, அரசே கல்விக் கூடங்களை நடத்து என்ற முழக்கத்தோடு எல்லா மாவட்டங்களிலும் போராட்டம் நடத்துங்கள்.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony