முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடியா? போலீஸ் மறுப்பு

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.18 - கடந்த 4 ம் தேதியன்று டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட போது யோகா குரு பாபா ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை டெல்லி போலீசார் மறுத்திருக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக டெல்லி போலீசார் நேற்று தங்களது பதில் மனுவை தாக்கல் செய்தனர். அப்போது ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை டெல்லி போலீசார் மறுத்தனர். 

பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள்தான் கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களை பாபா ராம்தேவ் தூண்டி விடும் வகையில் பேசினார் என்றும் தங்கள் மனுவில் டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகத்தான் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள் என்றும் டெல்லி போலீசார் தங்களது மனுவில் கூறியுள்ளனர். 

மேலும் போலீசார் அனுமதி கொடுத்த இடத்தை தாண்டி ராம்தேவின் ஆதரவாளர்கள் 3 முறை மீறி சென்றதாகவும் அதனால்தான் இரவு 1.30 மணிக்கு அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் டெல்லி போலீஸ் ஈடுபட்டது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. போலீசார் முடிந்த அளவில் பொறுமை காத்தனர். ஆனால் நிலைமை கைமீறிப் போனதால்தான் 8 கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன என்றும் தங்களது மனுவில் டெல்லி போலீசார் விளக்கமளித்துள்ளனர். மேலும் நள்ளிரவு ஒரு மணிக்கு அனுமதி வாபஸ் பெறப்பட்ட விஷயத்தை ராம்தேவிடம் தெரிவித்தோம். 80 நிமிடங்கள் அவகாசம் கொடுத்து அவர்களை வெளியேறும்படி கூறினோம். அதன் பிறகு இரவு 2.20 மணிக்குத்தான் போலீசார் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். அதுவும் கூட அவர்களது ஆதரவாளர்கள் கல்வீசிய பிறகுதான் அவர்களை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் டெல்லி போலீசார் தங்களது மனுவில் விவரித்திருக்கிறார்கள். 

முன்னதாக ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதம் குறித்து சுப்ரீம் கோர்ட் மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை, டெல்லி போலீஸ் கமிஷனர் குப்தா, டெல்லி தலைமை செயலர் திரிபாதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து டெல்லி போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தங்களது விளக்கத்தை பதில் மனு மூலம் தாக்கல் செய்தனர். இந்த விவகாரம் வரும் 20 ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. விடுமுறை கால நீதிபதிகள் சதாசிவம், ஏ.கே. பட்நாயக் ஆகியோர் இந்த வழக்கை அப்போது விசாரிப்பார்கள். முன்னதாக, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்த டெல்லி போலீசார் தங்களது நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையிலேயே பல கருத்துக்களை கூறியிருந்தார்கள். யோகா முகாம் நடத்துவதற்கே அனுமதிக்கப்பட்டது. மற்ற நோக்கங்களுக்காக அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தார்கள். மேலும் 5 ஆயிரம் பேர் கூடுவதற்கு மட்டுமே அனுமதி அளித்தோம். அதையும் மீறி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ராம்லீலா மைதானத்தில் கூடி விட்டார்கள் என்றும் அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தார்கள். 

ஊழலுக்கு எதிராகவும், கறுப்பு பணத்தை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காகவும் பாபா ராம்தேவ் 9 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். முதல் நாளன்று அவர் டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.  பிறகு தனது ஆசிரமத்திலேயே அவர் உண்ணாவிரதத்தை தொடங்கினார். 9 நாள் உண்ணாவிரதம் இருந்த அவர், உடல் நிலை மோசமடைந்த நிலையில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இருப்பினும் ஊழலுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்று அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்