முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. மாநில மாநாட்டுக்காக திருச்சியில் விளைநிலங்கள் அழிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

திருச்சி., பிப்-27 - விளைநிலங்களை அழிக்கக் கூடாது என்று தமிழக அரசே பிரச்சாரம் செய்து விட்டு இன்று அந்த விளைநிலங்களை அழித்து திருச்சியில் திமுக மாநில மாநாடு நடத்துகிறது. விளை நிலங்களை அழித்ததால் விவசாயிகள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

திருச்சி திருவானைக்கோவில் பைபாஸ் ரோட்டில் தாகூர் தெரு அருகில் சுமார் 80 ஏக்கர் பரப்பில் விவசாய நிலங்கள் இருந்தன. இந்த 80 ஏக்கர் நிலம் சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு சொந்தமானது. கொள்ளிடக் கரையோரமும், காவரி கரையோரமும் அமைந்துள்ளதால் தண்ணீருக்கு பஞ்சம் இல்லாமல் எப்போதும் பசுமையாக காட்சியளிக்கும். 

சென்னை பைபாஸ் ரோட்டோரம் இருந்த இந்த  80 ஏக்கர் விவசாய நிலங்கள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு கண்ணில் பட்டது. இந்த இடத்தை தி.மு.க. மாநில மாநாடு என்று வளைத்துப் போட திட்டமிட்டார் நேரு. அதற்கு உறுதுணையாக அப்பகுதியில் உள்ள தி.மு.க. வினர் விளைநிலங்களின் சொந்தக்காரர்களுக்கு பணத்தாசை காட்டி வளைத்துப்போட்டனர். விளைநிலங்களின் சொந்தக்காரர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவர்கள் வைத்திருக்கும் நிலங்களுக்கு ஏற்ப லட்சங்கள் கைமாறியது. 2 போகம் விளையக்கூடிய இந்த பசுமையான விளைநிலம் இன்று அமைச்சரின் கைத்தடிகளால் அழிக்கப்பட்டு வருகிறது. வயிறுக்கு சோறுபோடும் விளைநிலத்தை அழித்து இந்த மாநில மாநாடு தேவைதானா? என்று விளைநிலத்தில் வேலை பார்க்கும் பெண்களும், அப்பகுதி வாசிகளும், விவசாயிகளும் கேள்வி கேட்கிறார்கள். 

திருச்சி பகுதியில் எவ்வளவோ தரிசு நிலங்கள் கிடக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு விளைந்து கொண்டு இருக்கின்ற இந்த விளைநிலங்களை அழித்து மாநாடு என்று பெயரில் ஆளும் கட்சியினர் அப்பாவி விவசாயிகளை மாநில மாநாடு என்று ஏமாற்றி அபகரிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த இடத்தில் இருந்த பாசன வாய்க்கால்களும் மாநாட்டுக்காக அழிக்கப்பட்டு உள்ளது. பரம்பரையாக இருந்த வந்த சுடுகாட்டையும் தி.மு.க. வினர் தற்போது அழித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த மாநாடு நடைபெறும் இடம் அருகில் உள்ள குடியிருப்போர் கூறியதாவது,

 

1. முன்னாள் கவுன்சிலர் பி. சாமிக்கண்ணு:​- 

நான் தலைமுறை தலைமுறையாக இந்த இடத்தில் இருந்த வருகிறேன். நல்ல விளைச்சல் தரக்கூடிய விளைநிலமாக இருந்த வந்த இந்த நிலங்கள் அழிக்கப்படுவதை பார்க்கும்போது எனக்கு கண்ணீர்தான் வருகிறது. ஏன் தி.மு.க.வினருக்கு மாநாடு நடத்த வேறு இடமே கிடைக்க வில்லையா? விளை நிலங்களைத்தான் அழிக்க வேண்டுமா? இந்த இடங்களை வைத்திருப்போரை மிரட்டி எழுதி வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. சுடுகாட்டிற்கு செல்லும் பாதை மாநாடு என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. காலம் காலமாக அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தி வரும் கொள்ளிடக்கரை சுடுகாட்டை சுரண்ட நினைக்கிறது தி.மு.க. 

மாநாடு நடக்க இருப்பதால் இந்தப் பகுதி வழியாக உடல்களை கொண்டு போகக் கூடாது என்று அறிவிப்பும் செய்துள்ளனர். இதனால் திருவானைக்கோவில் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் கோபமடைந்துள்ளனர். நாங்கள் எங்கே சென்று இறந்தவர்களை புதைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிக்கொண்டு புரியாமல் தவித்து வருகின்றனர். 

விளைநிலங்களை அழித்தும் பாமர மக்களை பாடாய் படுத்தும் தி.மு.க.விற்கு இதுதான் கடைசி மாநாடாக இருக்கும் என்று தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார்.

 

2. ஜி.துரை:​​- 

மாநாடு நடக்கும் இடத்தில் விளைநிலங்களை வைத்திருப்பவர் இவர். எனது நிலங்கள் நன்றாக விளைச்சல் தரக்கூடியவை தற்போது எனது நிலம் எனது தம்பி பராமரிப்பில் உள்ளது. அவரிடம் இருந்து திமுகவினர் விளைநிலத்தை பறித்து விட்டனர். விளைநிலத்தை அழிப்பது பெற்ற தாயை கொன்று புதைப்பதற்கு சமம்.  தண்ணீர் தட்டுப்பாடின்றி அமோகமாக விளைந்த இந்த நிலத்தை அழித்து விட்டனர். இந்த 80 ஏக்கரில் சுமார் 10 ஏக்கர்தான் காட்டுக்கருவை உள்ள இடம். மற்ற 70 ஏக்கரில் கரும்பு, நெல் ஆகியவை பயிரிடப்பட்டு இருந்தது. பாசன வாய்க்கால்கள் வரும் பாதையை திமுகவினர் மாநாடு என்ற பெயரில் அழித்து விட்டனர். தி.மு.கனரின் அட்டகாசங்கள் தற்போது தாங்க முடியவில்லை. வருகின்ற தேர்தலில் மக்கள் இவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பார்கள். சென்னை பைபாஸ் ரோட்டோரம் அமைந்துள்ள இந்த 80 ஏக்கர் நிலத்தை மாநாடு முடிந்த பிறகு கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக காட்டவேண்டும் என்பதற்காகவும், ஊருக்குள் இந்த மாநில மாநாட்டை நடத்துகிறது திமுக. 

 

3.கரிகாலன் (திருவானைக்கோவில் முன்னாள் அறங்காவலர்):​​

மாநாடு நடைபெறும் இடத்தின் அருகில் என்னுடைய வாழைத்தோட்டம் உள்ளது. இந்த வாழைத்தோட்டத்திற்கு அருகில் மாநாட்டிற்கான இடத்தை சுத்தப்படுத்திய குப்பைகளையும் குச்சிகளையும் எரித்துக்கொண்டு இருக்கின்றனர். இதனால் எனது வாழைகள் கருகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனது தோட்டத்திற்கு அருகில் வளர்ந்து வந்து கொண்டிருந்த கரும்பை பாதியிலேயே வெட்டி எறிந்து விட்டனர். கரும்பு பயிரிடப்பட்ட விவசாயியிடம் கரும்பை அறுவடை செய்யச்சொல்லி மிரட்டியும் உள்ளனர். வேண்டும் என்றால் நஷ்ட ஈடு தருவதாகவும் கூறி உள்ளதாக தெரிய வருகிறது. பாசன வாய்க்கால்கள் அழிக்கப்பட்டு விட்டதால் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு கண்டிப்பாக 

ஏற்படும் என்று தெரிவித்தார். 

 

ஏ.முருகன்:​- 

திருச்சியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தி திருச்சியை திகைக்க வைத்து கூட்டத்தை காட்டியது. இந்த கூட்டத்தில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை சந்தித்ததே இல்லை என்று தெரிவித்தார். அதேபோல் அனைத்து பத்திரிகைகளும் இந்த கூட்டத்தை சுட்டிக்காட்டியே எழுதியது. இதனால் கோபம் அடைந்த தி.மு.க.வினர் தானும் அதுபோல் கூட்டத்தை காட்டவேண்டும் என்று நோக்கத்தோடு ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. ஆனால் எதிர்பார்த்தப்படி கூட்டம் வரவில்லை. தி.மு.க. தலைவருக்கு இதனால் வெறுப்புதான் வந்தது. எப்படியாவது திருச்சியில் மிகப்பெரிய கூட்டத்தை காட்டவேண்டும் என்ற நோக்கத்தோடு மீண்டும் திருச்சியில் இந்த தி.மு.க 10​ வது மாநில மாநாட்டை நடத்துகிறது. இதுவும் அவர்களுக்கு தோல்வியாகத்தான் முடியும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்