முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமச்சீர் கல்வி குறித்து ஆராய குழு

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.18 - சமச்சீர் கல்வியின் தரம் குறித்து ஆராய உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறந்த எதிர்காலம் அமையப்பெற, தரமான மற்றும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில், 2010-ம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச்சட்டத்திற்கு எனது அரசால் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தினை எதிர்த்து, ஒருசிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த திருத்த சட்டத்திற்கு இடைக்காலத்தடை விதித்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சிறப்பு மனுதாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் இந்த சிறப்பு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தனது 15.6.11 நாளிட்ட தீர்ப்பில், பாடத்திட்டத்தின் தரம் மற்றும் பாடநூல்களின் தரம் ஆகியன குறித்து ஆராய்வதற்கு, தலைமை செயலாளர் தலைமையில், இரு மாநில பிரதிநிதிகள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இரு பிரதிநிதிகள், இரு கல்வியாளர்கள், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், இந்த குழு தனது அறிக்கையை 6.7.11-க்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவிற்கிணங்க, கீழ்க்காணும் உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது:-

தமிழக அரசின் தலைமை செயலாளர் - தலைவர், இரு மாநில பிரதிநிதிகள்: ஜி.பாலசுப்பிரமணியன் - முன்னால் இயக்குநர் (கல்வி), மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் - உறுப்பினர், விஜயலட்சுமி சீனிவாசன் - முன்னாள் முதல்வர் - லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை மற்றும் ஆலோசகர், சென்னை சேவா சதன் (உதவி பெறும் பள்ளி) தாம்பரம் - உறுப்பினர்,

இரு கல்வியாளர்கள்: சி.ஜெயதேவ் - நிறுவனர் மற்றும் செயலாளர், டி.ஏ.வி பள்ளி குழுமம், கோபாலபுரம், சென்னை - உறுப்பினர், ஒய்.ஜி.பார்த்தசாரதி - முதல்வர் மற்றும் இயக்குனர், பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகள் குழுமம், சென்னை - உறுப்பினர், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இரு பிரதிநிதிகள்: பேராசிரியர் பி.கே.திரிபாதி - அறிவியல் மற்றும் கணிதவியல் கல்வித்துறை, புதுடெல்லி - உறுப்பினர், பேராசிரியர் அனில் சேத்தி - சமூக அறிவியல் துறை, புதுடெல்லி - உறுப்பினர், அரசு செயலாளர் - பள்ளிக்கல்வித்துறை - உறுப்பினர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்  - உறுப்பினர்-செயலர்.

மேற்கண்ட குழு உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 6.7.11-க்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony