முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடனுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், ஜூன் 19 - ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவனுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த பயங்கரவாத குற்ற வழக்கை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விலக்கிக்கொண்டனர்.கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11 ம் தேதி அமெரிக்கா மீது அல் கொய்தா தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலை நடத்தினர். இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அல் கொய்தா தலைவரும் சர்வதேச பயங்கரவாதியுமான ஒசாமா பின்லேடன் மீது அமெரிக்க கூட்டாட்சி புலனாய்வுத் துறை அதிகாரிகள் பயங்கரவாத சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பின்லேடன் கடந்த மே மாதம் 2 ம் தேதி பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க அதிரடிப்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். பிறகு பின்லேடனின் உடல் கடலில் வீசப்பட்டது. 

இதையடுத்து அமெரிக்காவில் பின்லேடனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகள் கைவிடப்பட்டு விட்டதாக அமெரிக்க கூட்டாட்சி புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒசாமா பின்லேடனுக்கு எதிராக நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் என்ற இடத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இப்போது பின்லேடனே கொல்லப்பட்டு விட்டதால் இந்த வழக்கு விசாரணையை இத்துடன் முடித்துக்கொள்வதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

இந்த நிலையில் கொல்லப்பட்டது  ஒசாமா பின்லேடன் தான் என்பது எப்படி அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்த விபரங்களை அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் நியூயார்க் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர். அதாவது ஒரு வழக்கை முடித்துக்கொள்ள அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்வதற்கான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் இந்த அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினர் மரபணு சோதனை முடிவுகளை வைத்து கொல்லப்பட்டது பின்லேடன்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் பின்லேடன் குடும்பத்தினரின் முகச் சாயல், தடயவியல் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டும் இறந்தது பின்லேடன்தான் என்பது உறுதி செய்யப்பட்டது என்று அந்த கோர்ட்டில் அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் தங்களது அறிக்கையில் கூறியிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்