முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணவேணியை தாக்கியவர்கள் மீது-நடவடிக்கை எடுக்கவேண்டும்-மா கம்யூ வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்,- 20 - திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றிவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்த கிருஷ்ணவேணியை தாக்கி,  கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் கோவையில் மாநில செயற்குழு உறுப்பினர்  பி. சம்பத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராஜன், மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன் எம்.பி., உ. வாசுகி உள்ளிட்ட மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து ஊராட்சியின் தலைவராக கிருஷ்ணவேணி செயல்பட்டு வருகிறார். இவர் தலித் சமுதாயத்தைச் சார்ந்த அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த ஒரு பெண் ஊராட்சித் தலைவராக செயல்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சக்திகள் இவருக்கு தொடர்ந்து இடையூறுகள் கொடுத்து வந்துள்ளதோடு மிரட்டியும் வந்துள்ளனர். ஊராட்சிக் கூட்டம் நடத்தும் போதும், கிராம சபைக் கூட்டம் நடத்தும் போதும் பல இடையூறுகளைச் செய்து இவர் ஊராட்சித் தலைவராக செயல்படுவதற்கு தொடர்ச்சியாக தடைகளை ஏற்படுத்தி வந்துள்ளனர்.

இப்பிரச்சனை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு இவரால் பலமுறை கொண்டு செல்லப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வாறு இடையூறுகளும் மிரட்டல்களும் செய்து வந்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் 13.6.2011 அன்று இரவு சுமார் 9.30 மணியளவில் தாழையூத்து ஊராட்சித் தலைவர் கிருஷ்ணவேணியை சாதிய வன்மத்தோடு ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் கிருஷ்ணவேணி  படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ஏற்கனவே இவரை மிரட்டியும், இடையூறும் செய்து வந்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத பின்னணியில் இத்தாக்குதல் நடந்துள்ளது. இத்தாக்குதல் நடத்திய சாதிவெறி கொண்ட சமூக விரோத சக்திகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவரை மிரட்டி வந்த சாதி வெறியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமலும், இவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்காமலும் இருந்த மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் கண்டனத்திற்குரியதாகும்.

தமிழ்நாடு அரசு, உடனடியாக தலையீடு செய்து கிருஷ்ணவேணியைத் தாக்கிய நபர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்குமாறும், கிருஷ்ணவேணிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பல வடிவங்களில் தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் நீnullடிப்பதையும், தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் சுயேச்சையான முறையில் செயல்படுவதற்கு இடையூறுகள் nullநீடிப்பதையும் சுட்டிக்காட்டி இவற்றை முடிவுக்குக் கொண்டு வர உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்