முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூன் - 23 - மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக சபாநாயகர் மீராகுமார் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது. பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றம் ஆகியவற்றில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மகளிர் மசோதா கடந்த ஆண்டு பாராளுமன்றத்தின் ராஜ்ய சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மசோதா லோக் சபையில் தாக்கல் செய்யப்பட்டபோது, இந்த ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம், முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி போன்ற கட்சிகளின் எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தியதை அடுத்து இந்த மசோதாவை லோக்சபையில் நிறைவேற்ற முடியவில்லை.
இப்போது பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் வருகின்ற ஆகஸ்ட் 1 ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த மழைக்கால கூட்டத் தொடரிலாவது லோக்சபையில் இந்த மகளிர் மசோதாவை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இருக்கிறது. இந்த மசோதா குறித்து ஒருமித்த கருத்தொற்றுமையை ஏற்படுத்த பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்.
இந்த கூட்டத்தை மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும் புறக்கணித்தன. இருந்தாலும் இதர அரசியல் கட்சிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் இந்த மசோதா தொடர்பாக ஒருமித்த கருத்து எதுவும் ஏற்படவில்லை. இதனால் ந்த அனைத்துக் கட்சி தோல்வியில் முடிந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சிவசேனா கட்சி எம்.பி.க்கள் அரசியல் கட்சிகளும் இந்த இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டன. இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர். நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா, இடதுசாரி கட்சிகள், அ.இ.அ.தி.மு.க., தி.மு.க., சிரோன்மணி அகாலிதளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால் இந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்து எதுவும் ஏற்படவில்லை. இந்த மசோதா  தொடர்பாக விவாதிக்க சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்களையும், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்களையும் தனியாக அழைத்து பேச இருப்பதாக சபாநாயகர் மீராகுமார் தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்