முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் 10 ஆயிரம் அமெரிக்க துருப்புகளை குறைக்க ஒபாமா திட்டம்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஜூன் - 23 - ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க துருப்புகளில் 10 ஆயிரம்பேரை குறைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக போர் தொடுத்த அமெரிக்கா, அந்நாட்டை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து பிறகு அந்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை நியமித்து தனது நாட்டு படைகளின் தலைமையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. அமெரிக்க அதிபராக ஒபாமா பொறுப்பேற்ற பிறகு ஆப்கானிஸ்தானிற்கு கூடுதலாக 20 ஆயிரம் அமெரிக்க வீரர்களை பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைப்பதாக கூறியிருந்தார். அதன்படி அவர்களும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது ஆப்கானிஸ்தானில் நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளதால் அங்கிருக்கும் அமெரிக்க வீரர்களை வாபஸ் பெற ஒபாமா முடிவு செய்திருக்கிறார். அதன்படி 10 ராணுவ  வீரர்களை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ளப் போவதாக ஒபாமா கூறியுள்ளார்.
இந்த 10 ஆயிரம் பேரில் 5000 பேர் இந்த கோடை காலத்திலும் மேலும் 5000 பேர் இந்த ஆண்டின்  இறுதியிலும் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்றும் ஒபாமா கூறியுள்ளதாக அமெரிக்க அரசாங்க செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் இதர 20 ஆயிரம் படைவீரர்களையும் விரைவில் அமெரிக்காவுக்கு திரும்ப அழைத்துக் கொள்ளப் போவதாகவும் ஒபாமா உறுதி கூறியுள்ளார் என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நேற்று அமெரிக்க ராணுவ அமைச்சர் ராபர்ட் கேட்ஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவைச் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்