முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழியின் உடல்நிலை - கருணாநிதி அப்செட்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.24 - டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன் மகள் கனிமொழியும், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் அடைக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன் மகளின் நிலை கண்டு கருணாநிதி மிகவும் அப்செட்டாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா உட்பட பலர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக அந்த டி.வியின் பங்குதாரர்களான கனிமொழி எம்.பியும், அந்த டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் கைது செய்யப்பட்டு அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமும் டெல்லி ஐகோர்ட்டும் நிராகரித்த நிலையில் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அங்கும் இவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வேதனையடைந்தார். கடந்த 21 ம் தேதி தன் மகளை சந்திப்பதற்காக அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். பின்னர் திகார் சிறையில் மகள் கனிமொழியை சந்தித்து விட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினார். அப்போது சி.ஐ.டி. காலனி இல்லத்தில் நிருபர்கள் அவரை சந்தித்தனர். கனிமொழியுடனான சந்திப்பு பற்றி நிருபர்கள் கேட்ட போது, 

கனிமொழியும், சரத்குமாரும் மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களால் வெப்பத்தை தாங்க முடியவில்லை என்றும் கருணாநிதி கவலையுடன் தெரிவித்தார். டெல்லியில் கொடுமையான வெப்பம் நிலவுகிறது. அந்த வெப்பத்தை அவர்களால் தாங்க முடியவில்லை. உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் கருணாநிதி வேதனையோடு தெரிவித்தார். அதே நேரம் சி.பி.ஐ. மீதும் கடுமையாக பாய்ந்தார் கருணாநிதி. பத்திரிக்கை தகவல்களின் அடிப்படையில் சி.பி.ஐ. செயல்படுகிறது என்று குற்றம் சாட்டிய கருணாநிதி, பொய்யான குற்றச்சாட்டுகளை எல்லாம் சி.பி.ஐ. நிரூபிக்க முயற்சி செய்கிறது என்றும் சாடினார். இருப்பினும் சட்டப்பூர்வமாக இந்த சவாலை தி.மு.க சந்திக்கும் என்றும் அவர் கூறினார். தி.மு.க. காங்கிரஸ் உறவு பற்றி அவரிடம் கேட்ட போது, பத்திரிகைகள்தான் யூகப்படுத்துகின்றன என்று குற்றம் சாட்டினார். அதற்கு பிறகும் நிருபர்கள் அதே கேள்வியை கேட்ட போது, உறவு நன்றாகவே இருக்கிறது. வயலார் ரவி கூட என்னை சந்தித்தார் என்று கூறிய கருணாநிதி, மற்ற காங்கிரஸ் தலைவர்கள் யாரும் தன்னை வந்து சந்திக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டார். லோக்பால் மசோதா என்ற வரம்புக்குள் பிரதமரையும் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து தமது கட்சிக்கு ஏற்புடையதே என்றும் அவர் கூறினார். 1970 களில் ஊழல் தடுப்பு சட்டத்தை தமது அரசு கொண்டு வந்த போது, அந்த வரம்புக்குள் முதல்வரையும் கொண்டு வர வேண்டும் என்று தமது அரசு கூறியதையும் அவர் நினைவுபடுத்தினார். எந்தவொரு நல்ல காரியத்துக்கும் ஆதரவு அளிக்க தி.மு.க தயார். ஆனால் ஒரு தனி நபரின் தனிப்பட்ட பலனுக்காக ஆதரவளிக்க மாட்டோம் என்றும் கருணாநிதி கூறினார். அன்னா ஹசாரேவின் போராட்டம் பற்றி கேட்ட போது அவர் இவ்வாறு பதிலளித்தார். டெல்லியில் இருந்து திரும்பிய கருணாநிதி, தன் மகளை சந்தித்த பிறகு வாடிய முகத்துடன் காணப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்