முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்ஜினீயரிங் ரேங்க் பட்டியலை அமைச்சர் பழனியப்பன் வெளியிட்டார்

சனிக்கிழமை, 25 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன், - 25 - 2011-12ம் கல்வி ஆண்டுக்கான என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் திருச்சி மாணவி திவ்யா முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலை அமைச்சர் பழனியப்பன் வெளியிட்டார். பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூலை 8ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான சேர்க்கை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை வெளியிட்டு உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:
இந்த ஆண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 1,48,355 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 5,246 பேரின் விண்ணப்பங்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 1,43,109 பேருக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
விளையாட்டு கோட்டா, முன்னாள் ராணுவத்தினருக்கான கோட்டா ஆகியோருக்கு ஜூன் 30ம்  தேதி  கவுன்சிலிங் நடக்கிறது. ஜூலை 1ம் தேதி முதல் 6 ம் தேதி வரை தொழில்கல்வி மாணவர்ளுக்கும், 7ம் தேதி உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங் நடக்கிறது.
ஜூலை 8ம் தேதி பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்குகிறது. இந்த கவுன்சிலிங் ஏறக்குறைய 35 தினங்கள் நடைபெறும். 494 கல்லூரிகளில் உள்ள 1,25,000 இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான புதிய என்ஜினீயரிங் கல்லூரிகள் குறித்து முடிவு தெரியவில்லை. ஏ.ஐ.சி.டி.ஈ. தான் இவர்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது. அதுபோல் அளிக்கும் பட்சத்தில் புதிதாக துவங்கப்படும் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும் சேர்த்து கவுன்சிலிங் நடத்தப்படும்.
கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கட்டண சலுகை தொடர்ந்து அளிக்கப்படும்.
என்ஜினீயரிங் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் குறித்து இன்று(நேற்று) கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஏதும் கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டால் அதுகுறித்து உடனடியாக தகவல்கள் தெரிவிக்கப்படும். இந்த குழுவின் முடிவு குறித்து நான் ஒன்றும் கூற முடியாது.
இவ்வாறு அமைச்சர் பழனியப்பன் கூறினார். பேட்டியின்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர், என்ஜினீயரிங் கல்வி சேர்க்கை பிரிவு செயலாளர் ரேமண்ட் உத்திரைராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
ரேங்க் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள மாணவ, மாணவியர் விவரம் வருமாறு:
பொதுப்பிரிவு
1.திவ்யா(திருவெறும்பூர், திருச்சி-200 மதிப்பெண்), 2.யோக பராசுகன்(ராசிபுரம், நாமக்கல்-200 மதிப்பெண்), 3.சுரேஷ் பால்ராஜ்(நன்மங்கலம், சென்னை-200 மதிப்பெண்), 4.ஹரிநிவாஷ்(சின்னசேலம், விழுப்புரம்-200 மதிப்பெண்), 5.அகிலா(பவானி, ஈரோடு-200 மதிப்பெண்), 6.ஜீவிதா(பி.வேலூர், நாமக்கல்-200 மதிப்பெண்), 7.விக்னேஷ்(ஹரூர், தருமபுரி-200 மதிப்பெண்), 8.மகாலட்சுமி(மடிப்பாக்கம், சென்னை-200 மதிப்பெண்), 9.ஆகாஷ்(சிவகாசி-200 மதிப்பெண்), 10.அபினயா(மாருப்பட்டி, சேலம்-200 மதிப்பெண்).
தொழிற்கல்வி
1.விஷ்ணுபிரகாஷ்(சீலநாயக்கன்பட்டி, சேலம்-200 மதிப்பெண்), 2.நெல்சன் பென்னி(குன்னூர், நீலகிரி-200 மதிப்பெண்), 3.கீர்த்தனா(மேட்டுப்பாளையம், கோவை-200 மதிப்பெண்), 4.கார்த்திகேயன்(சங்கரி, சேலம்-200 மதிப்பெண்), 5.சதீஷ்குமார்(சங்கரி, சேலம்-199.67 மதிப்பெண்), 6.கார்த்திக்(ஓமலூர், சேலம்-199.50 மதிப்பெண்), 7.அருண்முத்தையா(ராயப்பேட்டை, சென்னை-199.50 மதிப்பெண்), 8.வடிவேல்(தேசவிளக்கு, சேலம்-199 மதிப்பெண்), 9.தங்கதுரை(உடையார்பாளையம், அரியலூர்-198.83 மதிப்பெண்), 10.நிஷாந்த்(பெரியவிளை, கன்னியாகுமரி-198.83 மதிப்பெண்).
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்