முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபாநாயகர் தேர்தலை நடத்தவே பயப்படும் உங்களுக்கு ஆட்சி எதற்கு?- அன்பழகன் கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூன்.- 26 - புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுவை சட்டப்பேரவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதி 1963, அத்தியாயம் 3, விதி 9, உப விதி 1-ன் கீழ் சட்டமன்றம் என்று கூட்டப்பட்டதோ அன்றைய தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் சபாநயகர் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேர்தலுக்கு பிறகு சட்டமன்றம் கடந்த 3-ந் தேதி கூட்டப்பட்டது. இன்றுடன்(நேற்று) சட்டமன்றம் கூடி 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் ரங்கசாமி அரசு சட்டமன்ற நடத்தை விதிமுறைகளை மீறி மக்களாட்சி தத்துவத்திற்கு எதிராக ஜனநாயக நடைமுறையை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. இதனை முறைப்படுத்த வேண்டிய கவர்னர் தனது பொறுப்புகளில் இருந்து விலகி விட்டார். 

சபாநாயகர் தேர்தல் நடத்துவது ஒரு கடமை. அந்த கடமையை செய்வதற்கு கூட முடியாத பலகீனத்தோடு முதல்வர் ரங்கசாமி இருக்கிறார். புதுவை சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை 13 அரசுகள் அமைந்துள்ளது. ஆனால் இதுபோன்ற மோசமான ஆட்சி நடைபெற்றதே இல்லை. சபாநாயகர் தேர்தலை நடத்தவே பயப்படும் உங்களுக்கு ஆட்சி ஏன்? இது தொடர்பாக கவர்னரை சந்தித்தும் எடுத்துக் கூறினோம். அ.தி.மு.க.வின் குற்றச்சாட்டு அடிப்டையில் தான் கவர்னர், ரங்கசாமியை அழைத்து பேசியுள்ளார். 

அம்மா ஆட்சியின் செயல்பாட்டினை பாராட்டி பேசியுள்ள வைத்திலிங்கத்தின் கருத்தை அ.தி.மு.க. வரவேற்கிறது. அ.தி.மு.க.வின் தயவினால் தான் என். ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.விற்கு செய்த துரோகத்தினால் தான் ரங்கசாமியால் இன்று மெஜாரிட்டியை நிரூபிக்க முடியவில்லை. மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காகவே காங்கிரஸ் கட்சி அழைக்காமலேயே சோனியா காந்தியிடம் ரங்கசாமி சரண் அடைந்துள்ளார். காங்கிரசை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு விட்டு சோனியாவை சந்திப்பது ஏன்?

இது வாக்களித்துள்ள மக்களுக்கு செய்துள்ள துரோகம். அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. எந்த சட்டத்தின் கீழ் அரசு பணிக்கு நியமித்துள்ளீர்கள்? இப்போது எந்த சட்டத்தின் கீழ் வேலையில் இருந்து நீக்கியுள்ளீர்கள்? இந்த விஷயத்தில் நியாயமாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுக்கு வழியில் வேலைக்கு ஆட்களை நியமிப்பது தவறு என்று அ.தி.மு.க. பல ஆண்டுளாக வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் வேலைக்கு அமர்த்திய முன்னாள் அமைச்சருடன் நேரடியாக மோதாமல் அப்பாவி ஊழியர்களிடம் மோதி என்ன பயன்?

ரங்கசாமி தனது அரசியல் விளையாட்டை தனக்கு நிகரானவர்களிடம் காட்ட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சட்டமன்றத்தில் முறையிடுவது இயல்புதான். அவர்களை காவல்துறை மூலம் தாக்கியது என்ன நியாயம்? காவல்துறையினர் யார் அழைத்து சட்டமன்றம் உள்ளே வந்தனர்? சட்டமன்றத்தின் உள்ளே வர அவர்களுக்கு விதி உள்ளதா?

இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்