முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான சான்றிதழ்

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 2 - இந்த ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்காக முதல் 10 இடங்களைப்பிடித்த மாணவ, மாணவியருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சேர்க்கை சான்றிதழை வழங்கி பாராட்டினார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.  உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கும், என்ஜினீயரிங் படிப்புக்கான விளையாட்டு கோட்டா கவுன்சிலுங்கும் நேற்று முன்தினம் துவங்கியது. விளையாட்டு வீரர்கள், மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் குழந்தைகளுக்கான கவுன்சிலிங் நடந்தது. 

பொது பிரிவினருக்கான மருத்துவ கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடந்த கவுன்சிலிங்கை தமிழக  சுகாதாரத்துறை அமைச்சர்  வி.எஸ்.விஜய் தொடங்கி வைத்தார். ரேங்க் பட்டியலில் முதல் 10 இடம் பிடித்த மாணவ ​ மாணவிகளுக்கு இட ஒதுக்கீட்டுக்கான அனுமதி சான்றிதழை அப்போது அவர் வழங்கினார். 

மருத்துவ மாணவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்று முதல் 6​ந்தேதி வரை நடக்கிறது. 

இதன் முதல் நாளான நேற்று நடந்த கவுன்சிலிங்கில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:​ 1. சிவரஞ்சனி, 2. தாட்சாயினி, 3. சுருதிகணேசன், 4. சுரேஷ்பால்ராஜ், 5. ஹரிநிவாஸ், 6. துளஷீபா சவுந்தர்யா, 7. அகிலா, 8. மணிகண்டன், 9. சிவசக்திவேல், 10. அருண்குமார். முதல் இடம் பிடித்த 10 மாணவ​மாணவிகளையும் அமைச்சர் விஜய் பாராட்டினார். பின்னர் அமைச்சர் விஜய் நிருபர்களிடம் கூறியதாவது:​ 2011​-12​ம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்குரிய கவுன்சிலிங் நேற்று(நேற்று முன்தினம்) தொடங்கியது. சிறப்பு பிரிவினருக்கு நடந்த கவுன்சிலிங்கில் 49 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மீதமுள்ள இடங்களுக்கான பொது கவுன்சிலிங் இன்று(நேற்று) தொடங்குகிறது. 

தமிழகத்தில் உள்ள 17 அரசு கல்லூரிகள் மூலம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன.இதில் சிறப்பு பிரிவுக்கான 49 இடங்கள் போக மீதமுள்ள 1,604 இடங்கள் இந்த கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. இது தவிர 10 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் திருச்சியில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரிக்கு இன்னும் இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி கிடைக்கவில்லை. அதுபோக மற்ற 9 கல்லூரிகள் மூலம் 650 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசுக்கு கிடைக்கிறது. திருச்சியில் உள்ள கல்லூரிக்கு விரைவில் அனுமதி கிடைத்து விடும். அவ்வாறு கிடைத்தால் 115 இடங்கள் கூடுதலாக அரசுக்கு கிடைக்கும். சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளுக்கு கூடுதலாக தலா 100 இடங்கள் இந்த ஆண்டு கிடைக்க வாய்ப்பு இல்லை. அடுத்த ஆண்டு நிச்சயமாக கிடைக்கும். 2​வது கட்ட கவுன்சிலிங் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். 

முதல் கட்ட கலந்தாய்வில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள 2,254 இடங்கள் நிரப்பப்படுகின்றன. கலந்தாய்வில் பங்கேற்க மாணவ​மாணவிகளுடன் பெற்றோர்கள் திரளாக வந்து இருந்தனர். முதல் கட்ட கலந்தாய்வுக்கு 1803 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் சுகாதார துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மருத்துவ கல்வி இயக்குனர் வம்சா தாரா, மருத்துவ தேர்வு குழு செயலாளர் டாக்டர் ஷீலா கிரேஸ்ஜீவமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்