முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஸ் தினம் கொண்டாடும் கல்லூரிகள் மீது நடவடிக்கை

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப். 28 - பஸ் தினம் கொண்டாட அனுமதிக்கும் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் கூறினார். சென்னை பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டம் நடந்தது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து துணை வேந்தர் திருவாசகம் பேசியதாவது:​

கடந்த 2 வார காலமாக பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பஸ் தின கொண்டாட்டம் என்ற பெயரில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு வக்கீல் ஒருவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மாணவர்களின் இந்த செயலுக்கு பல்கலைக்கழகம்தான் பொறுப்பேற்று பதில் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

மாணவர்களை கட்டுப்பாடு உடையவர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பு கல்லூரி ஆசிரியர்களுக்கும், கல்லூரி முதல்வர்களுக்கும்தான் உள்ளது. மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் இது போன்ற செயல்களில் அனுமதிக்கும் கல்லூரிகள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும். 

பல கல்லூரிகளில் முழு நேர முதல்வரே இல்லாத நிலை உள்ளது. எனவே புது படிப்புகளுக்கு அனுமதி அல்லது மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த அனுமதி கேட்டு கல்லூரிகள் விண்ணப்பிக்கும் போது விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றியுள்ள கல்லூரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் மாலைநேர எம்.பி.ஏ. படிப்பு சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படும். பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள 3 கல்லூரிகளில் எந்தவித உள் கட்டமைப்பு வசதிகளும் இல்லாதது கண்டறியப்பட்டது. இந்த 3 கல்லூரிகளுக்கும் வரும் கல்வியாண்டில் பல்கலைக் கழக இணைப்பு ரத்து செய்யப்படும்.

இவ்வாறு  துணைவேந்தர் திருவாசகம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்