முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ அதிகாரியை காப்பாற்ற ராணுவம் முயற்சி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.- 5 - சென்னையில் ராணுவ குடியிருப்பில் சிறுவனை கொன்றது ராணுவ அதிகாரி என தெரியவந்துள்ளது. இதற்கிடையே கொலையாளியை காப்பாற்ற ராணுவ உயர் அதிகாரியின் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது.

சென்னை தீவுதிடல் அருகே உள்ள இந்திரா நகரில் வசிக்கும் தில்சன் (13) என்னும் சிறுவன் நேற்று அருகிலுள்ள ராணுவ குடியிருப்பில் பாதாம் கொட்டைகள்  பறிக்க உள்ளே நுழைத்த போது சுட்டுக்கொல்லப் பட்டான். சிறுவனை சுட்ட ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக முதல்வர் ஜெயலலிதா இந்த விகாரத்தில் தலையிட்டு கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் அளித்தார். துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரரை தமிழக போலீசிடம் ஒப்படைக்க கோரினார். நேற்று இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க ஜெயலலிதா உத்தரவிட்டார். இதனிடையே கொல்லப்பட்ட சிறுவன் தில்சானின் உடல் நேற்று காலை அடக்கம செய்யப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனிடையே சிறுவனை கொன்றது யார் என தெரியவந்துள்ளது. சிறுவன் தில்சன் உட்பட 3 சிறுவர்கள் மரத்திலிருந்து இறங்கி பாதாம் கொட்டைகளை பிரித்து கொண்டிருந்தபோது மிக அருகில் காரில் வந்த ராணுவ அதிகாரி ஒருவர் சுட்டதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சிறுவன் 15 அடி முதல் 20 அடி தூரத்திலிருந்து சுடப்பட்டதாக தெரிய வந்துள்ளது. சிறுவன் தலையை துளைத்த குண்டு அருகில் உள்ள சுவற்றில் பட்டு தெறித்துள்ளது.

மிக அருகில் நின்று சுட்ட ராணுவ அதிகாரி மித மிஞ்சிய போதையில் இருந்ததால் நிதானமிழந்து சிறுவனை சுட்டு கொன்றுள்ளார். சுட்ட பின் காரில் ஏறி ஓடிவிட்டார். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்குள்ள சிறுவர்கள் பாதாம் கொட்டைகள், மாங்காய்களை எடுக்க சுவரேறி உள்ளே குதித்து செல்வது வழக்கம். அப்போது ராணுவ வீரர்கள் சிறுவர்கள் என்பதால் மிரட்டி துரத்தி விடுவார்கள். ஆனால் போதையில் இருந்த அதிகாரி மிக அருகில் சிறுவர்கள் இருந்தபோது துரத்தாமல் தலையில் சுட்டு தனது கொடூரத்தை நிறைவேற்றி உள்ளார்.

இந்த கொலை சம்பவம் பற்றி ராணுவ உயர் அதிகாரிகள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி வருகின்றனர். சம்பவம் தங்கள் இடத்திலேயே நடக்கவில்லை என்று கூறி உள்ளனர். பின்பு தங்கள் தரப்பில் யாரும் சுடவில்லை. மிலிட்டரி போலீஸ் அல்லது தமிழக போலீசார் அல்லது பொதுமக்கள் யாராவது சுட்டிருக்கலாம் என்றனர். பின்பு தங்களுடைய செக்யூரிட்டிகளிடம் ஆயுதம் எதுவும் கொடுப்பதில்லை. ஆகவே தாங்கள் யாரும் சிறுவனை சுடவில்லை என்று தற்போது கூறியுள்ளனர்.

இதன் மூலம் ராணுவ உயர் அதிகாரிகள் பிரச்சினையை திசை திருப்ப முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சி.பி.சி.ஐ.டி.க்கு ஜெயலலிதா உத்தரவிட்டதன் பேரில் கோட்டை போலீசார் விசாரணை விபரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

உடனடியாக நேற்று சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சேகர் தலைமையில் டி.ஐ.ஜி. ஸ்ரீதர் எஸ்.பி.சோலை மிஸ்ரா மற்றும் பூக்கடை துணை ஆணையர் அன்பு உட்பட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் வந்தது தெரிந்ததும் ராணுவ உயரதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ சந்தித்தனர்.

சிறுவன் உயிரிழந்த இடத்தில் இருந்த ரத்தக்கறையை அழிக்கும் முயற்சி அந்த இடத்தை சிலர் துடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

துப்பாக்கி குண்டு சிதறல்களையும் போலீசார் சோதித்தனர். சிறுவனை சுட்ட உயர் அதிகாரி அவர் பெயர், அவர் வசிக்கும் பதவி, வந்த வாகனம் உள்ளிட்ட தகவல்களையும் போலீசார் சேகரித்துள்ளனர். முதல்வர் சம்பந்தப்பட்ட அதிகாரியை தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கும் படி கேட்டுள்ளார். ஆகவே சிறுவனை சுட்ட ராணுவ அதிகாரி கட்டாயம் சிக்குவார் என தெரிகிறது.

இதனிடையே இந்த சம்பவம் பற்றி பேட்டி அளித்த சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சேகர், சி.பி.சி.ஐ.டி. விசாரணை ஆரம்பித்து விட்டோம் வெகு விரைவில் சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டு பிடித்து விடுவோம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்