முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மின்சார தட்டுப்பாட்டை போக்க ​- முதல்வர் ஜெயலலிதா சி.ஐ.ஐ. மாநாட்டில் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 6 -  தமிழகத்தில் நிலவி வரும் மின்சார பற்றாக்குறை போக்க போர்கால நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றும் விரைவில் மின்தட்டுபாடு இல்லா மாநிலமாக தமிழகம் மாறும் என்றும் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.  இக்கூட்டத்து வருகை தந்த முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி கூட்டத்தினை தொடங்கி வைத்தார்.பின்னர் கூட்டத்தில் தலைமையுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் எங்களது அரசு பொறுப்பேற்று 50 நாட்களாகிறது. இங்கே கூடியிருக்கும் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு நீண்ட வரலாறு கொண்டதாகும். மக்களின் அன்றாடமற்றும் அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் வணிகம் செய்வோம் என்பதனை  இவ்வாண்டு நோக்கமாக கொண்டு இக்கூடமைப்பு செயல்படுவதை  அறிந்து நான் மிகவும் மகிழ்சியடைகின்றேன்.  ஒரு சராசரி மனிதனின் இன்றியமையாத தேவைகள் பூர்த்தியாகி அவனுடைய வாழ்க்கை தரம் உயரவேண்டும் என்பது தான் எங்கள் அரசின் பொருளாதார கொள்கையின் சாரம்சமாகும்.  எங்கள் அரசின் கொள்கைக்கு பொருந்துவதாக உங்களது கூட்டமைப்பின் நோக்கமும் அமைந்துள்ளது கண்டு  மகிழ்சியைடகின்றேன் .
தற்போது இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. 2050 ம் ஆண்டுகளில் இந்தியா, சீனா,ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளின் பொருளாதாரம்  உயர்ந்து உலக அரங்கில் முக்கிய ஆதிக்கம் செலுத்தும் என்று முக்கிய பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதுள்ள 8.5 சதவீதம் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து நீடித்தால் நம் நாடு 2015ல்  பொருளாதார வல்லமையில் கனடாவையும், 2020 ல் இத்தாலி, பிரான்சையும், 2025 ல் இங்கிலாந்து, ஜெர்மனியையும், 2030 ல் ஜப்பானையும் மிஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  2030 ல் உலகில் 3 வது பெரிய பொருளாதார சக்திகொண்ட நாடாகவும், 2050 ல் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் அளவு அமெரிக்காவை எட்டுமளவுக்கு இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு தூரம் வளர்ச்சிப்பாதையில் நாம் சென்று கொண்டிருந்தாலும் வறுமை மற்றும் மக்களுடைய வருவாயில் நிலவும் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டிய நிலையில் உள்ளோம்.  வறுமையை ஒழிக்க என்றுடைய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறது.  வறுமை ஒழிப்பு, நோய்தடுப்பு உள்ளிட்ட அடிப்படைகளில் ஒரு தீர்வு  காண்பதற்காக  ஜ.நா. வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறோம்.  தமிழகம் தொழில்துறையில்  சாதனை படைத்து வரும் மாநிலமாகும்.  குறிப்பாக பொறியியல் , வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்கள் தயாரித்தல், ஜவுளி, தோல், சர்க்கரை போன்ற தொழில் துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.
நான் தமிழக முதல்வராக இருந்தபோது அதாவது 1992,2003 ஆகிய ஆண்டுகளில் புதிய தொழில் கொள்கைகள் அறிவிக்கப்பட்டது. தொழில் வளர்ச்சியில் புதிய மைல்கல்லை எட்ட இவை உதவின. இதன் மூலம் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. போர்டு, ஹோண்டாய் போன்ற நிறுவனங்கள் இங்கு உருவாக எங்கள்  அரசின் கொள்கை முடிவுகள் காரணமாயின. மின்னனு தொழி ல் துறையிலும் புதிய மாற்றங்கள் உருவாகி நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் இங்கு தொடங்கப்பட்டன.
பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையானது  மின்சாரம், கடந்த  எங்களுடைய 2001-2006 ஆட்சியின் போது தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை.  தற்போது நிலவும் மின் தட்டுப்பாட்டை நீக்க போர்க்கால  நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெகு விரைவில் இந்த தட்டுபாட்டை நீக்கி உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக தமிழகம் திகழும்.
தொழில் முனைவோருக்கு எல்லா வகையிலும் ஏற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.  நாட்டிலேயே அதிகமாக 500 பொறியியல் கல்லுரிகள் இங்கு உள்ளன.  இந்த கல்லுரிகளிருந்து வருடத்திற்கு சுமார் 1 லட்சத்து 92 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் உருவாகிறார்கள்.  தொழில் நிறுவனங்களுக்கு தேவையான  அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் இம்மாநிலத்தில் தொழில் தொடங்கும்படி தொழில் முனைவோரை கேட்டுக்கொள்கிறேன்.  உங்களுடைய எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யும் வகையில் 2025 ஆண்டு தொலைநோகு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளோம். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
நிகழ்சியில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம்,  செங்கோட்டையன்,  செந்தமிழன், கோகுல இந்திரா உட்பட தொழிலதிபர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்