முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் ஜெயலலிதா இன்று டெல்லி பயணம்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 6 - மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்​அமைச்சர் ஜெயலலிதா இன்று  டெல்லி செல்கிறார். முதல்வராக பதவி ஏற்ற பின்பு ஜெயலலிதா இரண்டாவது முறையாக இன்று டெல்லி செல்கிறார். தமிழகத்தில் முந்தை மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் தேவையில்லாத செலவு, ஊழல் ஆகியவைகளின் காரணமாக தமிழகத்தை பெரும் கடனாளி மாநிலமாகிவிட்டது. புதிய தலைமை செயலகம் கட்டுவதாக கூறி ரூ. 1000 கோடி வீணாகிவிட்டதாக தெரிகிறது. இவ்வளவு செலவு செய்தும் அங்கு சட்டசபை கூட்டத்தை நடத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது. தி.மு.க. ஆட்சியின் போது வளர்ச்சி திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க முடியாமல் அவைகள் முடங்கிப்போய் கிடந்தன. மின்சார உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தனபோக்குடன் இருந்ததால் தமிழகத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மின்தட்டுபாடு நிலவியது. இதை போக்க வேண்டுமென்றால் மின்சார உற்பத்தியை பெருக்க பெருமளவு நிதி தேவைப்படுகிறது. இந்தநிலையில்  
மத்திய திட்டக்குழுவின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த முதல்​அமைச்சர் அல்லது அவர்கள் சார்பில் நிதி அமைச்சர் கலந்துகொள்வார்கள். அவர்கள் தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களுக்கும் அடுத்து செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்களுக்கும் தேவையான நிதி மற்றும் மத்திய அரசு வழங்கும் நிதி குறித்து கூட்டத்தில் வலியுறுத்துவார்கள்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு முதல் முதலாக தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்டு 4-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் 2011-2012​ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார்.  இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டுக்கான (2011-2012) திட்டக்குழுவின் கூட்டம் டெல்லியில் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல்​மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் முதல்​அமைச்சர் ஜெயலலிதா கலந்துகொள்கிறார். அப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்குமாறு திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை அவர் வலியுறுத்தி கேட்டுக்கொள்வார். கடந்த நிதி ஆண்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட கூடுதல் நிதி ஒதுக்குமாறும் முதல்​அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்​அமைச்சர் ஜெயலலிதா பதவியேற்ற பிறகு முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் 14​ந் தேதி டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்திற்கு மத்திய மின்தொகுப்பில் இருந்து கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதோடு, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி மானியம் தேவை என்றும் வலியுறுத்தினார்.
மேலும், மோனோ ரெயில் திட்டம், தமிழக நதிகள் இணைப்பு, சிறப்பு பொதுவினியோக திட்டம் உள்பட பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்திட மத்திய அரசு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்​அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், தற்போது, 2-​ம் முறையாக முதல்​அமைச்சர் ஜெயலலிதா நாளை டெல்லி செல்கிறார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் நாளை காலை டெல்லி செல்லும் அவர், மாலையே சென்னை திரும்புகிறார். அவருடன் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்டோரும் உடன் செல்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்