முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

புதன்கிழமை, 6 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூலை.- 6 - தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுவை மாநில அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அவைத்தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைச்செயலாளர்கள் புருசோத்தமன் எம்.எல்.ஏ., பெரியசாமி எம்.எல்.ஏ., மாநில எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் பாஸ்கர் எம்.எல்.ஏ., கழக துணைத்தலைவர் உமாபதி, நகர செயலாளர் ரவீந்திரன், இணைசெயலாளர்கள் மணிமாறன், திருநாவுக்கரசு, அரசி,காசிநாதன், பரசுராமன், துணைச்செயலாளர்கள் லக்கிபெருமாள், வெங்கடாசாமி, பன்னீர்செல்வி, கணேசன், பி.எல்.கணேசன், மாநில கழக பொருளாளர் சுத்துக்கேணி பாஸ்கர், உழவர்கரை நகர செயலாளர் அன்பானந்தம், வக்கீல் பிரிவு செயலாளர் குணசேகரன், இந்திராநகர் தொகுதி செயலாளர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

3-வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்று, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி அல்லும், பகலும் அயராது பாடுபடும் தமிழக முதல்வர் புரட்சித்தலைவியை இக்குழு மனதார பாராட்டுகிறது. 

புதுவை மாநிலத்தில் கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறை, பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் கடந்த 2 ஆண்டுகளில் பணிக்கு அமர்த்தப்பட்ட 2500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேலையை விட்டு நீக்கிய தற்போதைய அரசின் செயலை இக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்துகிறது. பாதிப்புக்குள்ளாகி உள்ள ஊழியர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்துவது. 

புதுவையில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விக்கான சென்டாக் தேர்வு முடிவுகளை வெளியிடாத அரசின் செயலை கண்டிப்பது. புதுவையில் இயங்கும் 7 தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் மொத்தம் உள்ள 950 இடங்களில் ஏற்கனவே தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் அரசுக்கு அளித்த உறுதிமொழிகளின் படி 50 சதவீத இடங்களை அரசின் ஒதுக்கீடாக பெற உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும். மருத்துவ கல்லூரிக்கான அரசு இடஒதுக்கீட்டை குறைத்து பெற்றால் ஏழை-எளிய மாணவர்களுக்காக மாணவர்களையும், பொற்றேர்களையும் ஒன்று திரட்டி அ.தி.மு.க. போராட்டம் நடத்தும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்