முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கோவில் ஒரே மாதத்தில் 248 பெண்கள் கற்பழிப்பு

புதன்கிழமை, 6 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

நகீலி, ஜூலை - 6 - ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த ஒரே மாதத்தில் 248 பெண்களை அந்நாட்டு ராணுவத்தினர் கற்பழித்துள்ளனர். இதனால் இந்த நாட்டை கற்பழிப்பு தலைநகர் என்று ஐ.நா. சபை வர்ணித்துள்ளது. காங்கோ நாட்டில் சுட்-கிவூ மாகாணத்தில் அந்நாட்டு ராணுவத்தினர் ஏராளமான பெண்களை கற்பழித்து வருகின்றனர். கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 248 பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அபாலா நகரில் குறிப்பாக கடந்த ஜூன் 11 மற்றும் 12ம் தேதி இரவு மட்டும் 121 பெண்களை ராணுவத்தினர் கற்பழித்துள்ளதாக ஒரு மருத்துவமனை டாக்டர் கூறியுள்ளார்.  அதற்கு முந்தைய இரவில்மட்டும் 55 பெண்களை இவர்கள் கற்பழித்துள்ளனர் என்று ஒரு நர்ஸ் தெரிவித்தார்.  காங்கோவில் கற்பழிப்பு என்பது தொடர்கதையாகி வருகிறது. கற்பழிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். அதன்படி இந்த கற்பழிப்பு எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. காங்குலி என்ற கிராமத்தில் இரவு நேரத்தில் ராணுவத்தினர் தங்களை கற்பழித்ததாக அந்த கிராமத்து பெண்கள் கூறியுள்ளனர். தேசிய ராணுவத்தின் கர்னல் நிராஜிர் குலிமுஷி கட்டளையின்படி நக்கீலி கிராமத்தில் 150 ராணுவத்தினர் பெண்களை கற்பழித்ததோடு அவர்களிடம் இருந்த ஆபரணங்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் தனித் தனி குழுவாக வரும் இவர்கள் இதுபோன்ற அட்டூழியங்களை செய்துவருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.  அன்று நள்ளிரவு அந்த கிராமத்தின் பல பகுதிகளில் பெண்களின் கதறலை கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். நள்ளிரவில் கற்பழிப்பு சம்பவங்களை துவங்கிய இவர்கள் அதிகாலை 5 மணிக்குத்தான் அந்த கிராமத்தை விட்டு வெளியேறினர். அதன்பிறகு அந்த பெண்களை சந்தித்து ஆறுதல் கூறியதாக கிராமத் தலைவர் தெரிவித்தார்.  

2 குழந்தைகளுக்கு தாயான 28 வயது பெண் ஒருவர் கூறுகையில்,  இரண்டு ராணுவ வீரர்கள் தனது வீட்டு கதவைத் தட்டி திறக்கச் சொன்னதாகவும், திறக்காவிட்டால் சுட்டுக் கொல்வோம் என்று மிரட்டினார்கள் என்றும், பயத்தில் கதவைத் திறந்தபோது அவர்கள் இருவரும் தன்னை கற்பழித்துவிட்டு விடிகாலையில் எழுந்து சென்றுவிட்டதாகவும் கூறினார். 

காங்கோ நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனால் கிராமங்களில் உள்ள ஆண்களை விரட்டிவிட்டு பெண்களை கற்பழித்து, பொருட்களை அபகரிக்கும் கொடூர செயல்களில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். காங்கோ நாட்டில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால் அந்நாட்டை உலகத்தின் கற்பழிப்பு தலைநகரம் என்று ஐ.நா. சபை வருணித்துள்ளது. மேலும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடராமல் இருக்க ஐ.நா. அமைதிப்படை காங்கோவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்