முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் ராஜினாமா

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை 8 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ.யால் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்தார். கடந்த 2008-ம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்கியதில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு கூறியிருந்தது. இதை அடுத்து தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்கள் சித்தார்த் பெகூரா,  சந்தோலியா,  ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா,  தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த  நிலையில் தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீதும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக புகார்கள் எழுந்தன.

இவர் கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2007 ம் ஆண்டுவரை மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது 2006 ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னையை தலைமையிடமாக கொண்ட சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனமும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை  கேட்டு விண்ணப்பம் செய்தது.  ஆனால் ஏர்செல் நிறுவனத்திற்கு உரிய காலத்தில் ஒதுக்கீடு தராமல் அப்போதைய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் இழுத்தடித்து காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

மலேசியாவில் உள்ள தனது நண்பர் அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக தயாநிதி மாறன் செயல்பட்டார் என்றும் ஏர்செல்  நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்காகவே ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் கொடுக்காமல் தயாநிதி மாறன் காலதாமதம் செய்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

2008 ம் ஆண்டு நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் மட்டுமல்லாமல் அதற்கு முன்பு நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் குறித்தும் விசாரணை நடத்துமாறு மத்திய புலனாய்வுத்துறை நிறுவனமான சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பின் கீழ் 2006 ம் ஆண்டு நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் குறித்தும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையில் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய  வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஏர்செல் நிறுவனத்திற்கு தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்காமல் இழுத்தடித்தார் என்பதை சி.பி.ஐ. தனது விசாரணையில்  கண்டறிந்தது.

2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையின் தற்போதைய  நிலைமை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. 

அதில் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தை விற்பதற்காகவே வேண்டும் என்றே ஏர்செல் நிறுவனத்திற்கு 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமத்தை தயாநிதி மாறன் வழங்காமல் இருந்தார் என்பது  கண்டறியப்பட்டுள்ளது என்றும் எனவே இந்த விவகாரத்தில் தயாநிதி மாறனும் ஒரு குற்றவாளிதான் என்று  தாங்கள் சந்தேகிப்பதாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க., அ.தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேற்கண்ட அறிக்கையில் தயாநிதி மாறனை குற்றம்சாட்டியுள்ளதை அடுத்து தயாநிதி மாறன் தனது ஜவுளித் துறை அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்தார்.  

நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அவரது வீட்டில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிறகு தயாநிதி மாறன் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.

மத்திய மந்திரிசபை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய செய்தி ஒலி-ஒளிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இந்த தகவலை தெரிவித்தார். அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதிமாறனின் ராஜினாமா குறித்து விவாதிக்கப்பட்டதா என்று கேட்டதற்கு அதுகுறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும், தயாநிதிமாறனும் இதுகுறித்து பிரச்சனை எழுப்பவில்லை என்றும் மற்றவர்களும் இதுகுறித்து பேசவில்லை என்றும் அம்பிகா சோனி குறிப்பிட்டார். 

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முதலில் ஆ.ராசா, அதற்கு அடுத்து கனிமொழி ஆகியோர் தலைகள் உருண்ட நிலையில் இப்போது தி.மு.க.வில் மூன்றாவதாக தயாநிதிமாறனின் தலையும் உருண்டுள்ளது. தயாநிதிமாறனை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தி.மு.க. மேலிடம் நேற்று முன்தினமே சம்மதித்துவிட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே அவர் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவியை தயாநிதிமாறன் ராஜினாமா செய்துள்ளதால் அந்த பதவிக்கு தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு நியமிக்கப்படலாம் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. 

முன்னதாக அமைச்சரவை கூட்டத்திற்கு சென்ற தயாநிதிமாறன், அங்கு தனக்கு நெருக்கமான அமைச்சர்கள் சிலரிடம் எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறியதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்