முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் 2ம் நாளாக ராகுல் பாதயாத்திரை

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

அலிகார்,ஜூலை.8 - உத்தர பிரதேச மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாத யாத்திரை 2 வது நாளாக தொடர்ந்தது. 

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலத்தில் கிஸான் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். ராகுலின் இந்த பாதயாத்திரை சட்ட விரோதமானது என்று அலிகார் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 12 ம் தேதியில் இருந்து இம்மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் இங்கு அனுமதியின்றி பாதயாத்திரை மேற்கொள்வது சட்டவிரோதமானது என்று மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சத்யேந்திர வீர் சிங் தெரிவித்துள்ளார். 

அலிகாரில் நாளை மகா பஞ்சாயத்து நடத்தவே காங்கிரஸ் கட்சியினர் அனுமதி பெற்றிருப்பதாகவும், பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த விஷயத்தில் அனைத்து வாய்ப்புகளுக்கும் நாங்கள் வழி விட்டுள்ளதாகவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

2 வது நாளாக நடைபெற்ற ராகுலின் பாதயாத்திரையை அரசியல் நாடகம் என்று பகுஜன் சமாஜ் கட்சி விமர்சித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை மனதில் கொண்டே ராகுல் இந்த பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளதாக அக்கட்சியின் செய்தி குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. இதற்கிடையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான விவேக் பன்சால் அலிகார் மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்து கூறியதாகவும், பாதயாத்திரையின் போது வன்முறை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் உள்நோக்கம் ஏதும் இல்லையென்றும் விளக்கியதாகவும் அவர் தெரிவித்தார். அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையில் ராகுல் தடுத்து நிறுத்தப்பட மாட்டார் என்று மாவட்ட நிர்வாகம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். 

இதற்கிடையில் சியோரோல் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராகுலை அலிகார் மாவட்டத்தில் நுழைய விடாமல் இருக்க மாயாவதி அரசு முயல்வதாக விவேக் பன்சால் குற்றம் சாட்டினார். ராகுலின் பாதயாத்திரைக்கு விவசாயிகளிடத்தில் கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பை அடுத்தே உத்தர பிரதேச அரசு தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். ராகுலின் பாதயாத்திரை அரசியல் நாடகம் என்று விமர்சிக்கப்படுவதை மறுத்த அவர், விவசாயிகளின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள அக்கறையுள்ள தலைவர் மேற்கொள்ளும் முயற்சியே இது என்றார். 

நாளை 9 ம் தேதி நடைபெறவுள்ள மகாபஞ்சாயத்துக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருவதாக பன்சால் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!