முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் பஸ் மீது ரயில் மோதி 40 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

கன்சிராம்நகர், ஜுலை 8 - உத்தரபிரதேசத்தில் ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் நின்றுகொண்டிருந்த ஒரு பஸ் மீது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதியதில் 40 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் எடா என்ற இடத்திற்கு அருகேயுள்ள மிர்ச்சாய் என்ற கிராமத்தில் இருந்து அருபூர் என்ற கிராமத்திற்கு ஒரு திருமணத்திற்காக 85 பேர் ஒரு பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தனர். அர்பூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு இவர்கள் அதே பஸ்ஸில் சொந்த கிராமத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.  அப்போது கன்சிராம் மாவட்டம் பட்டயாலி என்ற இடத்தில் உள்ள ஒரு ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை கடந்துசெல்ல முற்பட்டபோது அந்த பஸ்ஸில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பஸ் அந்த ரயில்வே கிராசிங்கில் தண்டவாளத்தின் குறுக்கேயே நின்றுகொண்டிருந்தது. அந்த பஸ் கிளீனர் பஸ்ஸின் அடிப்புறத்தில் கோளாறை சரிசெய்துகொண்டிருந்தார். அப்போது மதுராவில் இருந்து சாப்ரா நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் அந்த பஸ்மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த பஸ் ரயில்வே கிராசிங்கில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. இதில் திருமண கோஷ்டியைச் சேர்ந்த ஆண் பெண் குழந்தைகள் என 40 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். பஸ் சின்னாபின்னமாக்கப்பட்டு ரயில்வே தண்டவாளத்தின் அருகே கிடந்தது. டமால் என்ற சத்தத்துடன் பஸ்மீது ரயில் மோதிய சத்தம் கேட்ட பக்கத்து கிராம மக்கள் பதறி அடித்து ஓடிவந்து பஸ்ஸில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட 24 பேர் கன்சிராம், எடா மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு தண்டவாள பாதையின் ஓரமாக அடுக்கிவைக்கப்பட்டன. மொத்தம் 38 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் 40 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டதும் ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த ரயில்வே பாதையில் சில மணி நேரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நேற்று அதிகாலை 1.50 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!