முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்வெஸ்ட் கிரிக்கெட் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து அணி

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

மான்செஸ்டர், ஜூலை - 11 -இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி  3 - 2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.  இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் ஒரு நாள் போட்டியை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற 2 ஒரு நாள் போட்டிகளை இலங்கை அணி கைப்பற்றி தொடரில் முன்னிலை பெற்றது. நான்காவது ஒருநாள் போட்டியை இங்கிலாந்து அணி கைப்பற்ற போட்டித் தொடர் 2 - 2 என்ற கணக்கில் சமனானது. இதைத் தொடர்ந்து இந்த போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் இறுதி போட்டி மான்செஸ்ட்டரில் நடைபெற்றது. ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் பேட்டிங்கை தேர்வு செய்தார். கருணாரத்னே இலங்கை தரப்பில் ஒருநாள் போட்டியின் அறிமுக வீரராக களமிறங்கினார்.
இங்கிலாந்து தரப்பில் துவக்க வீரர்கள் கிய்ஸ்வெட்டர் மற்றும் குக் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை தந்தனர். குக் 31 ரன்கள் எடுத்த நிலையில் ரந்தீவின் பந்தில் சங்ககாராவால் ஸ்டம்ப் முறையில் வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக ட்ராட் களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்தபோது கிய்ஸ்வெட்டர் 43 ரன்கள் எடுத்த நிலையில் பிரசாத்தின் பந்தில் போல்டானார். தொடர்ந்து ட்ராட்டுடன் களமிறங்கிய பீட்டர்சன் அதிகம் ரன் எதுவும் எடுக்காத நிலையில் பிரசாத்தின் பந்தில் சங்ககாராவால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து மோர்கன் மற்றும் ட்ராட் இணை அதிரடியாக ரன்களைக் குவித்தது. இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 213 ஆக உயர்ந்தபோது அரை சதம் அடித்திருந்த மோர்கன், தில்சனின் பந்தில் அவுட்டானார். அடுத்த வந்த பெல் 4 ரன்களில் ரந்தீவ் பந்தில் விக்கெட்டை பறிகொடுக்க 222 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து. அதுவரை சிறப்பாக விளையாடிய ட்ராட்டும் 72 ரன்கள் எடுத்த நிலையில்  ரந்தீவ் பந்தில் போல்டானார்.  இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அதிகமாக ரன்களை எடுக்காவிட்டாலும் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்களை எடுத்து ஓரளவு வலுவான நிலையை எட்டியது. இலங்கை தரப்பில் ரந்தீவ் 5 விக்கெட்டுகளையும், பிரசாத் 2 விக்கெட்டுகளையும், தில்ஷன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
50 ஓவர்களில் 269 ரன்கள்  இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அறிமுக வீரர் கருணாரத்னே மற்றும் கேப்டன் தில்ஷன் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ப்ரேஸ்னன் வீசிய 2 வது ஓவரில் அறிமுக வீரர் கருணாரத்ன 4 ரன்களே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது இலங்கை அணி 7 ரன்களை எடுத்திருந்தது. அடுத்ததாக சங்ககாரா களமிறங்கினார். இந்நிலையில் தில்ஷன் இம்முறையும் இலங்கை அணியை ஏமாற்றினார். 4 ரன்களே எடுத்திருந்த அவர் ப்ரேஸ்னன் பந்தில் டென்பெக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இவரைத் தொடர்ந்து ஜெயவர்த்தனே, சங்ககாராவுடன் ஜோடி சேர்ந்தார். ஜெயவர்த்தனேவும் 9 ரன்களே எடுத்திருந்த நிலையில் ஆண்டர்சன் வேகத்தில் குக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இவரைத் தொடர்ந்து சண்டிமால் களமிறங்கினார். இவரும் சங்ககாராவும் ஓரளவு விக்கெட் விழாமல் ரன்களை உயர்த்தினர். அணியின் எண்ணிக்கை 123 ஆக இருந்தபோது 54 ரன்களை எடுத்திருந்த சண்டிமால் ஸ்வானின் சுழலில் விக்கெட்டை இழந்தார். இவரைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர் மேத்யூஸ் களமிறங்கினார். இந்நிலையில் நன்கு விளையாடிக்கொண்டிருந்த சங்ககாரா 48 ரன்கள் எடுத்த நிலையில் ப்ரேஸ்னன் வேகத்தில் வீழ்ந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 30 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ஆக இருந்தது. இதற்கு பின் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் (62) மற்றும் மெண்டிஸ் (48) ஜோடி ஓரளவு ரன்களை சேர்த்தாலும்  இலங்கை வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் அந்த அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் 48.2 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. ரந்தீவ் மற்றும் பிரசாத் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ப்ரேஸ்னன் 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், டெம்பேக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பட்டேல், ஸ்வான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை 3 - 2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. ட்ராட் ஆட்ட நாயகனாகவும், அலிஸ்டர் குக் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்மூலம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்