முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் செந்தமிழன் புழல் சிறையில் திடீர் ஆய்வு

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.13 - செய்தி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் செந்தமிழன் புழல் மத்திய சிறைச்சாலைக்குச் நேற்று சென்று சிறைச்சாலை-1 மற்றும் சிறைச்சாலை-2 ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- இவ்வாய்வின்போது சிறைவாசிகளுக்கு கற்றுக்கொடுக்கப்படும் கணினி பயிற்சி, ஆங்கிலப் பயிற்சி போன்றவற்றையும், சிறைவாசிகள் தங்கள் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் கற்றுக் கொடுக்கப்படும் கைத்தறி, தையல் போன்றவற்றையும் ஆய்வு செய்தார்கள். சிறைவாசிகள் மன அமைதி பெறும் வகையில் நடைபெறும் தியான பயிற்சியையும், நூலகம், சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கப்படும் சமையலறை, பண்டகசாலை மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை கேட்டறிந்தார்.

வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடுகள் ஏற்படாத வண்ணம் சிறை அலுவலர்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். மேலும் புழல் மத்திய சிறையில் இயங்கும் வீடியோ கான்பிரன்ஸ் அரங்கம் மற்றும் நீதிமன்ற செயல்பாடுகள், தண்டனைக் காலத்தில் சிறைவாசிகளால் காகிதக் கூழ்கள் கொண்டு தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை எழுது அட்டை, புத்தகப் பைண்டிங் தேவைப்படும் அட்டைகள், அலுவலக அட்டை போன்றவற்றை பார்வையிட்டார்.

சிறைவாசிகளுக்கு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்த அவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும் உணவுக்கு தேவையான காய்கறிகள் அவர்களால் பயிரிடப்படுகிறது என்பதை கேட்டறிந்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், சிறைவாசிகள் கவலையின்றி இப்பணியில் ஈடுபடுவதன் மூலம் அவர்களின் உடல் ஆரோக்கியம் நல்லமுறையில் இருப்பதற்கு இது பெரிதும் உதவும் என்றும் தெரிவித்தார்.

சிறைவாசிகள் தங்களுக்குற்ற பாட்டுத் திறனை வளர்க்கும் வகையில் செயல்படும் ``இல்ல வாசிகளின் இசைக்குழு''வினைப் பாராட்டினார்.

இவ்வாய்வின்போது சிறைத்துறை கூடுதல் இயக்குனர் எஸ்.கே.வெங்கடோக்ரா, சென்னை சரக சிறைத் துறை துணைத் தலைவர் ஆர்.துரைசாமி மற்றும் சிறை கண்காணிப்பாளர்கள் ஜி.சண்முகந்தரம் மற்றும் ஆர்.கனகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்