முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதிதிராவிட மாணவ - மாணவியர் விடுதிகள் பராமரிக்க நிதி

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.13 - தமிழகத்தில் உள்ள 1059 ஆதிதிராவிட மாணவ, மாணவியர் விடுதிகள் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்தது கண்டறியப்பட்டு அதனை பராமரிக்க, கூடுதல் கட்டுமான பணிகள் செய்ய, அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரூ.76 கோடியே 33 லட்சத்து 46 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  

இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  

சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், வாழ்வில் முன்னேற்றம் பெற்று அதன் மூலம் சமூக, பொருளாதார மேம்பாட்டினை அடையும் வகையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை முந்தைய காலகட்டங்களில் எனது அரசு தீட்டி அவைகளை செம்மையாக செயல்படுத்தி வந்தது. 

சிறப்பான கல்வி தான் நலிந்த பிரிவினரான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதார நிலையில் நிரந்தரமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.  அவ்வாறான சிறந்த கல்வி கிடைக்கப் பெற வேண்டுமெனில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் தங்கிப் பயிலும் விடுதிகள், அவர்கள் செம்மையாகக் கற்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது மிகவும் அவசியமாகும்.

இந்த அடிப்படையில் தான், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தோம்.மேலும், நான் முதலமைச்சராகப் பதவியேற்றதும், தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள் அனைத்தும் சரிவர பராமரிக்கப்படாமல் மாணவ, மாணவியர் பெரும் அவதிக்குள்ளாவது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.  எனவே அதைப் பற்றிய முழு விவரங்களை சேகரிக்கும்படி நான் உத்தரவிட்டேன். இதன் அடிப்படையில் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், மாநிலம் முழுவதும் உள்ள 1294 விடுதிகளில், 1059 விடுதிகள் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்ததும், குடிநீnullர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லாமல் இருந்ததும் கண்டறியப்பட்டது.

எனவே, ஆதிதிராவிட மாணவ, மாணவியர்கள் நல்ல அமைதியான, சுகாதாரமான சூழ்நிலையில் தங்கி கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்துடனும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணமும், மாநிலம் முழுவதும் உள்ள 1059 ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் பழுதுபார்ப்பு / சிறப்பு பராமரிப்பு / கூடுதல் கட்டுமானப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள 76 கோடியே 33 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன்மூலம், சமூகத்தில் பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாகிய ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் அமைதியான, சுகாதாரமான சூழலில் தங்கி கல்வி பயிலவும், அதன் மூலம் வாழ்வில் வளம் பெறவும் இயலும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்