முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனோண்மணியம் சுந்தரனார் பல்கலை., தொலைதூர கல்வியில் ஊழல்

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

நெல்லை ஜூலை-13 - நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைத்தூரக்கல்வியில் பி.எட். படிப்பிற்கு சீட் வழங்குவதில் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ள விவகாரம் கல்வித்துறை வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகேயுள்ள அபிஷேகபட்டியில் அமைந்துள்ளது மனோண்மணியம் சுந்தரானார் பல்கலைக்கழகம். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளுமே இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்கி வருகிறது. மேலும் பல்கலைக்கழகத்திலும் ஏராளமான மாணவியர் படித்து வருகின்றனர். மேலும் இப்பல்கலைகழகத்திலுள்ள தொலைதூர கல்வி இயக்கத்தில் தமிழகம் முழுவதும் ஏராளமானவர்கள் பல்வேறு பட்டப்படிப்புகள் மற்றும் பட்டமேற்படிப்புகள் படித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கத்தின் சார்பில் பி.எட். பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் ஒரு சில பல்கலைக்கழகங்களே தொலைதூரகல்வியில் பி.எட். பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தியதால் தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மாணவ-மாணவியரும், ஆசிரியர் பணியாற்றி வருபவர்களும் இந்த படிப்பில் சேர அதிகம் ஆர்வம் காட்டினர். இப்பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்த மாணவ-மாணவியர் 200பேரிடம் ரூ.1லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெற்றுகொண்டு அவர்களுக்கு சீட் வழங்கியதாக கடந்த 3வருடங்களாக துணைவேந்தராக பொறுப்பு வகித்து வந்த முன்னாள் துணை வேந்தர் சபாபதி மோகன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தற்போது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.வைசேர்ந்த இவர் கடந்த 2010-11ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்கையில் மட்டும் இவர் பலகோடி ரூபாய் பணம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தொலை தூரக்கல்வியில் பி.எட். படிப்பில் சேர கடந்த 2010-2011 கல்வியாண்டில் ஏராளமான மாணவ-மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். படிப்பில்சேர தேர்வு செய்யப்பட்டிருந்தவர்களின் இறுதி பட்டியல் கடந்த 18.11.2010 அன்று வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் 500பேர் இடம் பெற்றிருந்தனர். அப்போது பி.எட். பட்டப்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்ததால் விண்ணப்பம் படிவம் வழங்குவதற்கான காலகெடு நீட்டிக்கப்பட்டது. இதனால் கடந்த ஜனவரி மாதம் வரை விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மொத்தம் 1124 பேர் படிப்பில் சேர விண்ணப்பித்திருந்தனர். தேர்வு செய்யப்பட்டிருந்தவர்களின் இறுதி பட்டியலிலேயே 18.11.2010ம் தேதிக்கு பின்னர் விண்ணப்பித்திருந்தவர்களில் 200 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. காலதாமதமாக விண்ணப்பம் செய்த இந்த 200 பேரின் பெயர்கள் எப்படி 18.11.2010 அன்று வெளியான இறுதி பட்டியலில் வெளியானது என்பதுதான் மறைந்திருக்கும் மர்மம். காலதாமதாமாக விண்ணப்பித்திருந்தும்  முன்னதாகவே தேர்வு பட்டியலில் இடம்பெற்ற 200 பேரின் விண்ணப்பத்திலும் துணைவேந்தர் சபாபதி மோகன் பரிந்துரை செய்து கையெழுத்திட்டுள்ளார். மேலும் அவர்களிடமிருந்து தலா ரூ.1லட்சம் வீதம் சுமார் ரூ.2கோடி வரை வசூல் செய்துள்ளார். இதில் பல்லகலைக்கழக அதிகாரிகள் பலருக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 3வருடம் இவர் துணைவேந்தராக இருந்த கால கட்டத்திலும் இவர் இதே முறையை பின்பற்றி பலகோடி ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து புதிதாக தொலைத்தூரக்கல்வி இயக்குனராக பொறுப்பேற்ற ரமேஷ் உயர்கல்வி துறை செயலாளர் கண்ணணிடம் ஆதாரங்களோடு புகார் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து உயர்கல்வி துறை செயலாளர் கண்ணண், சட்டத்துறை செயலாளர் ஆகியோர் நெல்லை பல்கலைக்கழகத்தில் கடந்த 10தினங்களுக்கு முன் விசாரணை நடத்தி சென்றுள்ளனர். இது குறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள தொலைதூரக்கல்வி இயக்குனர் ரமேஷை தொடர்புகொண்டபோது நாம் மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையென்றும், இது தொடர்பாக நான் உயர்கல்வி துறை செயலாளரிடம் புகார்கொடுத்ததால் தனக்கு தொடர்ந்து தொலைபேசியில் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதே போல் பல்கலை கழத்தில் பல்வேறு வழியில் பல கோடிகள் மோசடி செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இனி பல்கலை கழகத்திருந்து வெளியாகப்போகும் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளும் கல்வி துறை வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்