முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமச்சீர் கல்வி விசாரணை முடிவு: தீர்ப்பு ஒத்திவைப்பு

புதன்கிழமை, 13 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூலை.13 - சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நேற்று முடிவுக்கு வந்தது. இதற்கான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தலைமை நீதிபதி இக்பால் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்சில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது  சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் விடுதலை, செல்வம் மற்றும் புருஷோத்தம் ஆகியோர் நேற்று வாதங்களை முன்வைத்தனர்.

இதன்பிறகு அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதாடும்போது, கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் உருவாக்கியபோது என்.சி.இ.ஆர்.டி.யின் வழிகாட்டுதலை பின்பற்றவில்லை. தி.மு.க. அரசு அமைத்த நிபுணர் குழுவில் பாலசுப்பிரமணியன், சுவாமிநாதன் ஆகிய இருவரும் பள்ளி கல்வி தொடர்பான பாடத்திட்டத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்கள். 

11.11.2010 அன்று ஒரே நாளில் சட்டப்பேரவையில் சமச்சீர் கல்வி குறித்த பாடத்திட்டங்களும், புத்தகங்களும் முடிவு செய்துள்ளார்கள். போதிய அவகாசம் இன்றி குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டதால் இது தரமற்றதாக இருக்கிறது.

தமிழக மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும். எனவே, தான் கல்வியின் முக்கியத்துவம் கருதி, இந்த ஆண்டில் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சமச்சீர் கல்வி குறித்து கேபினட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது.

சமச்சீர் கல்வி வேண்டாம் என்பதல்ல எங்கள் நோக்கம். குறைபாடுகளை நீக்கியபிறகு இத்திட்டத்தை செயல்படுத்திவிடுவோம்.

இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் தமிழக அரசுக்கு ஆதரவாக வாதாடுகையில், சமச்சீர் கல்வியை அமல்படுத்த போதிய அவகாசம் இல்லாமல் அவசர கதியில் கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டத்தை திருத்தி அரசுக்கு அதிகாரம் உள்ளது. மத்திய கல்வி சட்டத்திற்கு ஏற்ப சமச்சீர் கல்வி திட்டத்தில் பாடங்கள் உருவாக்கப்படவில்லை. 

9 கோடி மாணவர்களுக்காக ரூ.200 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதைவிட தரமான கல்வி முக்கியம் என்பதனை மறந்துவிடக்கூடாது. சமச்சீர் கல்வி திட்டமே இப்போது விவாதத்திற்குரிய பொருளாகிவிட்டது. சமச்சீர் கல்வியில் என்.சி.ஈ.ஆர்.டி. வரையறுத்துள்ள தகுதி இல்லை. மாணவர்களின் படைப்பாற்றலையோ, திறனையோ வளர்க்கக்கூடியதாக இல்லை. 

சமச்சீர் கல்வி குறித்து தமிழக அரசு நியமித்துள்ள நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள அனைவருமே கல்வியாளர்கள் தான். அதில் குறிப்பாக இருவர்  சி.பி.எஸ்.ஈ. பள்ளிகள் நடத்துவதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த இருவரும் மெட்ரிக் பள்ளிகளும் நடத்தி வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை இயக்குனரும் மாநில பாடத்திட்டத்தின் சார்பில் இடம்பெற்றுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூத்த வழக்கறிஞர் விஜயன் கூறும்போது, 1 மற்றும் 6-ம் வகுப்புகளில் மட்டும் இப்போது சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்துவதாலும், மற்ற வகுப்பினருக்கு பழைய பாடத்திட்டங்களே நடத்துவதாலும் மிகப்பெரிய குழப்பம் ஏற்படுகிறது. எனவே, 1 மற்றும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டத்திலேயே நடத்த வேண்டும் என்றார்.

அனைத்து வாதங்களையும் கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி இக்பால், இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. தீர்ப்பு நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஏதேனும் தாக்கல் செய்ய விரும்பினால் நாளைக்குள்(இன்றைக்குள்) பதிவு செய்யலாம். அதற்கு அரசு பதில் தர வேண்டியதில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்