முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம்-புதுவை: ஏப்ரல் 13-ம் தேதி தேர்தல்

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, மார்ச் - 2 - தமிழகம் மற்றும் புதுவை மாநில சட்டசபைகளுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை மற்றும் புதுவை மாநில சட்டசபைகளுக்கான ஆயுட்காலம் வருகிற மே மாத மத்தியில் முடிவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய சட்டசபையை அமைப்பதற்கான தேர்தல் அட்டவணை குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுவை சட்டசபைகளுக்கு ஏப்ரல் 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். இதற்கான அறிவிக்கை மார்ச் 19 ம் தேதி வெளியிடப்படும். 

அன்றைய தினமே (மார்ச் 19) வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26-ம் தேதி என்றும் அவர் கூறினார். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28-ம் தேதி என்றும், வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசிநாள் மார்ச் 30-ம் தேதி என்றும் அவர் அறிவித்தார். தமிழகம், புதுவை மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றுமுதலே அமுலுக்கு வந்துவிட்டன. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 59 லட்சம் என்றும் அவர் கூறினார். மேலும் முதன் முறையாக வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தலைமை தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.  தமிழகம், புதுவையில் ஏப்ரல் 13 ம் தேதி ஓட்டுப் பதிவு நடைபெற்றாலும்கூட இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஒரு மாதம் கழித்து அதாவது வருகிற மே மாதம் 13 ம் தேதிதான் நடைபெறும் என்றும் குரேஷி கூறினார். ஓட்டு எண்ணிக்கை இவ்வளவு நீண்ட நாட்களுக்கு தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தமிழகம், புதுவையில் தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

தமிழகம், புதுவை சட்டமன்ற தேர்தல்களோடு மேற்கு வங்காளம், அசாம், கேரளா ஆகிய மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் அட்டவணையையும் குரேஷி வெளியிட்டார்.  

கேரள மாநிலத்திற்கான வாக்குப் பதிவும், தமிழகத்தைப் போலவே ஏப்ரல் 13 ம் தேதி நடைபெறுகிறது. இங்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அசாம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது. முதல் கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவில் 62 சட்டசபை தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டமாக நடைபெறும் வாக்குப் பதிவில் 64 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இதில் முதல்கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 4 ம் தேதியும், அடுத்த கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11 ம் தேதியும் நடைபெறுகிறது. 

மேற்கு வங்க மாநிலத்திற்கான வாக்குப் பதிவு 6 கட்டங்களாக நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 18, 23, 27 மற்றும் மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் இங்கு தேர்தல் நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 13 ம் தேதி நடைபெற இருக்கிறது என்றும் அவர் கூறினார். இந்த தேர்தல் பாதுகாப்பு பணிகளில் அந்தந்த மாநில போலீசாருடன், மத்திய துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்தார். 

அரசியல் கட்சிகள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் 2011-12 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  அடுத்த நாளே இந்த 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேற்கு வங்கமாநிலம், கேரளா ஆகிய மாநிலங்களில் இடதுசாரி கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க முஸ்தீபு செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை வீழ்த்த அ.தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணியை ஒழுங்குபடுத்துவதிலும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதிலும் மும்முரம் காட்டி வருகின்றன. 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago