முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு தீர்ப்பு - 11 பேருக்கு தூக்கு

புதன்கிழமை, 2 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச் -2 - கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 31 பேர்களில் 11 பேருக்கு தூக்கு தண்டனையும் மீதி 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் இருக்கும் பாபர் மசூதி- ராமர்கோயிலில் நடந்த கரசேவையினர்களில் ஒரு பகுதியினர் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி குஜராத் மாநிலத்திற்கு வந்தனர். ரயிலானது குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையத்திற்கு அருகே வந்தபோது ரயிலுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். இதில் எஸ்6 கோச் முழுமையாக எரிந்து சாம்பலானது. அதில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்டவர்கள் தீயில் கருகி செத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு குஜராத்தில் வகுப்பு கலவரத்தை மூளச்செய்தது. இதில் ஏற்பட்ட வன்முறையில் ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். 

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கை ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் மொத்தம் 94 பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர். விசாரணை முடிவில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 63 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதி 31 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.ஆர்.படேல் அறிவித்தார். ஆனால் அப்போது தண்டனை விபரத்தை அவர் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அந்த 31 குற்றவாளிகளுக்கும் தண்டனை விபரத்தை நீதிபதி படேல் அறிவத்தார். அந்த 31 பேரில் 11 பேருக்கு தூக்குத்தண்டனையும் மீதி 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். 

இந்திய தண்டனை சட்டம் 120(பி), 302,307, 323,324,325, 395, 397, 436, 153,(ஓ) ஆகிய பிரிவுகளின் கீழும் ரயில்வே சட்டம் 149 பிரிவின் படியும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  இந்த ரயில் எரிப்பு சம்பவம் சதித்திட்டம் தீட்டப்பட்டு நடத்தப்பட்டுள்ளதை கோர்ட்டு தெளிவாக ஆய்வு செய்து அறிந்துள்ளது. அதனால் 11 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று அரசு வழக்கறிஞர் ஜே.எம். பஞ்சால் நேற்று ஆமதாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். ரயில் எரிப்பு சம்பவமானது மிகவும் கொடூரமானது என்றும் அதனால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள அந்த 31 பேருக்கும் தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் ஒரு வழக்கில் 11 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு அளித்திருப்பது முதல் தடவையாகும். அதேசமயத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யவும் நீதிபதி படேல் அனுமதியும் கால அவகாசமும் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony