முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டர்களை தாக்கினால் தண்டனை: பீகாரில் புதிய சட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூலை 17 - பீகாரில் டாக்டர்களை தாக்கினால் தண்டனை வழங்க புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்ட முன்வடிவிற்கு பீகார் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. பீகாரில் சமீபத்தில் நோயாளிகள் சிலர் சிகிச்சை பலனிக்காமல் பலியானார்கள். இதற்கு டாக்டர்கள்தான் காரணம் என்று கூறி அந்த டாக்டர்கள் மீது நோயாளிகளின் உறவினர்களும், நண்பர்களும் தாக்குதல் நடத்தினார்கள். இதுபோன்ற சம்பவங்களில் ஒரு டாக்டர் உயிரிழந்தார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் மாநிலத்தில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன. தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மாநில அரசுக்கு பீகார் மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து டாக்டர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க பீகார் அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்தது. இதற்காக சட்ட முன்வடிவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமுன் வடிவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார். சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பு மசோதா என்ற இந்த மசோதா சட்டமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 

இந்த புதிய சட்டத்தின்படி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு எதிரான தாக்குதல் தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இந்த புதிய சட்டத்தின்படி 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். மேலும் மருத்துவமனை சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டால் அதற்குரிய நஷ்ட ஈடு அபராதமாக வசூலிக்கப்படும் என்று நிதீஷ்குமார் கூறினார். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் அமர்ஜீத் சின்ஹா ஆகியோருடன் முதல்வர் நிதீஷ்குமார் இந்த புதிய மசோதா குறித்து நேற்று விவாதம் நடத்தினார். அந்த விவாதத்திற்கு பிறகு முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார். மேலும் நோயாளிகளுக்கு டாக்டர்கள்  முறையான சிகிச்சை கொடுக்க வேண்டும். நோயாளிகளிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்பதுபோன்ற விதிமுறைகளும் இந்த புதிய சட்டமசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நர்ஸிங்ஹோம் பதிவு மசோதா ஒன்றுக்கும் பீகார் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த புதிய மசோதாவின்படி தனியார் மருத்துவமனைகள் முறையான பதிவு செய்த பிறகே இயக்கப்படவேண்டும் என்று நிதீஷ்குமார் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்