முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரிஸ்ஸா முதல்வர் ராஜினாமா செய்ய காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 18 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புவனேஷ்வர், ஜூலை - 18-  காஞ்சம் மாவட்டத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒரிஸ்ஸா மாநில காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சிகள் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ராஜினாமா செய்ய  வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. ஒரிஸ்ஸா மாநிலம் காஞ்சம் மாவட்டத்தில் கொடாலா என்ற இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள். இந்த  சம்பவம் ஒரிஸ்ஸாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக்  உடனடியாக பதவி விலக  வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு காங்கிரஸ் குழு ஒன்று நேரில் சென்று  பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசியது. 

இதை அடுத்து   காங்கிரஸ் தலைவர் நரசிங்க மிஸ்ரா  செய்தியாளர்களிடம்  கூறுகையில்,  இந்த  துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு  நவீன் பட்நாயக் தார்மீக பொறுப்பேற்று உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து  ராஜினாமா  செய்ய  வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஐகோர்ட்டு  நீதிபதி ஒருவர்  தலைமையிலான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்த  நீதி விசாரணை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் 3 மாதங்களுக்குள் இந்த அறிக்கை  தாக்கல்  செய்யப்பட  வேண்டும் என்றும்  மிஸ்ரா கேட்டுக்கொண்டார். துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே போல பா.ஜ.க.  தலைவர் பிஜய் மொகாபத்ரா வும்   நவீன் பட்நாயக்  ராஜினாமா  செய்ய  வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார். முதல்வர் பதவியில் நீடிக்க நவீன் பட்நாயக்  உரிமை இழந்து விட்டார் என்றும்  துப்பாக்கிச்சூட்டிற்கு தார்மீக பொறுப்பேற்று அவர்  தனது பதவியை  ராஜினாமா செய்ய  வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த சம்பவம் குறித்து  நீதி விசாரணைக்கு உத்தரவிட  வேண்டும் என்றும் அவர் கோரிக்கை  விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்