முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாரி உரிமையாளர்கள் போராட்ட தேதி இன்று ஹூப்ளியில் அறிவிக்கப்படுகிறது

திங்கட்கிழமை, 18 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஜூலை - 18- டீசல் விலை உயர்வு,  இன்சூரன்ஸ் பிரீமியம் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு  பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்த தேதியை இன்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் அகில இந்திய மோட்டார்  காங்கிரஸ் அறிவிக்க இருக்கிறது. சமீபத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதனால் லாரிகளின்  சரக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாய  நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டனர்.  லாரிகளின் வாடகை கட்டணத்தை உயர்த்தினால்  அத்யாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும்  அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மோட்டார் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமிய கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால்  லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய மோட்டார்  காங்கிரஸ் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

இதனால் நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படும் என்று அஞ்சிய மத்திய அரசு, மோட்டார் காங்கிரஸ் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து பேச்சு நடத்தியது. 

கடந்த மாதம் 27 ம் தேதி இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நடந்தது. 

மத்திய தரைவழி போக்குவரத்து துறை  அதிகாரிகள் மற்றும் மோட்டார்  காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. ஜூலை 17 ம் தேதிக்குள் தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் தங்களது வேலை நிறுத்த போராட்டம் குறித்த தேதியை ஜூலை 18ம் தேதி அறிவிக்க இருப்பதாக மோட்டார்  காங்கிரஸ் கூறியிருந்தது.

அதன்படி  மோட்டார்  காங்கிரஸ் அளித்த கால அவகாசம் நேற்று மாலையுடன்  முடிவடைந்தது.

ஆனால் மத்திய அரசிடமிருந்து  இது வரை எந்த சாதகமான பதிலும் வரவில்லை.  அதனால் அகில இந்திய மோட்டார்  காங்கிரசின் கூட்டம் நேற்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா,  கேரளா, ஆந்திர பிரதேசம், குஜராத் , மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின்  லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் டீசல் விலை உயர்வு, லாரிகள் மீதான  இன்சூரன்ஸ்  பிரீமிய கட்டண உயர்வு , டோல் கேட்டுகளில் சீரற்ற கட்டண விதிப்பு போன்ற பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த  கூட்டம் இன்றும் தொடர்ந்து நடக்கிறது. இன்றைய கூட்டத்தில் எந்த தேதியில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்பது  தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.  இந்த  தீர்மானத்தின்படி நாடு தழுவிய லாரிகள் வேலை நிறுத்த தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று அகில இந்திய லாரி உரிமையாளர்கள்  சங்கங்களின் கூட்டு சம்மேளன தலைவர் நல்லதம்பி பெங்களூரில் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

போராட்ட தேதி அறிவிக்கப்பட்டால் அந்த  தேதியிலிருந்து நாடு முழுவதும் 70 லட்சம் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும். இதனால் பல கோடி ரூபாய் வருமான இழப்பு  ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்டிரைக்கினால் அத்யாவசிய பொருட்களின் விலைகளும் உயரும் என்ற அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம்  செய்தால்  தாங்களும் அந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப்போவதாக தனியார் பஸ் மற்றும் வேன் உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர்.  இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு  பிரச்னைக்கு  தீர்வு காணுமா என்பது  இன்று மாலைக்குள் தெரியவரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்