முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்

புதன்கிழமை, 2 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 2 - பத்து செல்போன் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்பட மொத்தம் 63 பேரிடம் 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை முறைகேடு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல் கூறியுள்ளது.   2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம் சாட்டியது. இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். 2 ஜி.ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்கி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரகான வழக்கறிஞர் இந்த முறைகேடு தொடர்பான வழக்கில் 10 செல்போன் நிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட  63 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர் என்று தெரிவித்தார். 

நடைபெற்றுக்கொண்டிருக்கும் சி.பி.ஐ.யின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திருப்தி தெரிவித்தனர். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணைகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்று நீதிபதிகள் கேட்டதற்குத்தான் அவர் மேற்கண்ட பதிலை சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அந்த நீதிமன்றத்திற்கான நீதிபதியை நியமனம் செய்ய டெல்லி ஐகோர்ட்டுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கடிதம் எழுதி இருப்பதாகவும் இந்திரா ஜெய்சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony