முக்கிய செய்திகள்

முதல்வருக்கு மிரட்டல்: சிம்கார்டு விற்பனையாளர் கைது

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை, 21 - கடந்த ஜூலை 11-ந் தேதி தமிழக முதல்வர் மற்றும் தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் எஸ்.எம்.எஸ். கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது. இதன் பேரில் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு போலி சிம்கார்டு வழங்க உதவியாக இருந்ததாக சிம்கார்டு சில்லரை விற்பனையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆவணங்களை சரி பார்க்காமல் சிம்கார்டு வழங்கினால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று கமிஷனர் தெரிவித்துள்ளார். 

கடந்த ஜூலை 11-ந் தேதி அன்று சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி தகவல் வந்தது. காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் செல்லில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

வழக்கினை விசாரணை செய்ததில் குறுஞ்செய்தி தகவல் அனுப்பியவர் மதுராந்தகத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முன்னாள் விரிவுரையாளராக வேலை செய்த அச்சரப்பாக்கத்தை சேர்ந்த யோகேஸ்வரன்(36) என்று தெரிய வந்தது. அவர் ஜூலை 14 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு  அனுப்பப்பட்டார்.     

மேலும் வழக்கின் குற்றவாளி யோகேஸ்வரன் குறுஞ்செய்தி அனுப்ப பயன்படுத்திய சிம் கார்டினை விழுப்புரத்திலுள்ள ஒரு சில்லரை விற்பனையாளரிடமிருந்து வாங்கியது தெரிய வந்தது. சிம் கார்டினை வாங்கும் நபரிடமிருந்து அவருடைய போட்டோ அடங்கிய அடையாள சான்றினை சரி பார்த்த பின்னரே சிம் கார்டினை வழங்க வேண்டும். ஆனால் விழுப்புரத்தை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் போட்டோவில் உள்ள நபர் வேறு யாரோ என்று தெரிந்தே யோகேஸ்வரனுக்கு சிம் கார்டினை விற்பனை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. எனவே கல்யாண சுந்தரம் நேற்று முன்தினம் (ஜூலை 19) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

சிம் கார்டுகள் வாங்குபவர்களின் போட்டோ அடையாள சான்றிதழ் மற்றும் தேவையான ஆவணங்களை சரிபார்த்து வாங்காமல் விற்பனை செய்யும் கடைக்காரர்களின் மேல் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: