முக்கிய செய்திகள்

இலவச அரிசி திட்டம் குறையின்றி வழங்க அமைச்சர் ``அட்வைஸ்''

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.21 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க நேற்று  (20.7.2011) ,  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில்,   அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச அரிசி திட்டம் குறைவின்றி செயல்படுத்த  வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

அப்போது மாவட்டங்களில் உள்ள பொதுவிநியோகத் திட்ட செயல்பாட்டின் மேம்பாட்டிற்காக தொடர வேண்டிய மேல் நடவடிக்கைகள்,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இலவச அரிசி விநியோகத்திட்டத்தின் செயல்பாடுகள், பயிர்க்கடன் வழங்குதல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு பயிர்க்கடன் வழங்குதல், நகைக்கடன் வழங்குதல், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குதல், வைப்புத் தொகை சேகரிப்பதில் முன்னேற்றம், மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் வழங்குதல், பொதுச் சேவை மையங்கள், வேளாண் மருத்துவ பயன்பாட்டு மையங்கள் மற்றும் வேளாண் சேவை மையங்களின் செயல்பாடுகள், கடன் வசூலில் ஏற்பட்ட முன்னேற்றம், விதைகள் விற்பனை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வுக்குப்  பின்னர்,  பயிர்க்கடன் வழங்குதல், வைப்புநிதி சேகரித்தல், கூட்டுறவு வங்கிகள் மக்களுக்கு சேவை புரியும் பொருட்டு முழுமையாக கணினிமயமாக்கப்பட வேண்டும் மற்றும்  பல்வேறு கடன்கள் வழங்குதலில் நிர்ணயிக்கப்பட்ட குறியீடுகளை எய்த வேண்டும் எனவும், இலவச அரிசித் திட்டத்தில் எவ்வித குறைபாடுகளுமின்றி செயல்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ப.அண்ணாமலை, மற்றும் கூடுதல் பதிவாளர்கள் ந.அசோகன், அ.சங்கரலிங்கம், இரா.ராஜேந்திரன், இரா.ஜெயராம், க.மா.தமிழரசன், ம.ப.சிவன் அருள், மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: