முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில மோசடியில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

நெல்லை ஜூலை-22 - நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தமிழக அரசு மீண்டும் முனைப்புடன் செயல்படுத்தவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நெல்லை வந்த அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மனித உரிமை மீறலை கண்டித்து கடந்த 1999ம் ஆண்டு நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்க பேரணியாக சென்ற மாஞ்சோலை தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 17தொழிலாளர்கள் தாமிரபரணியாற்றில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23ம் தேதி உயிரிழந்த தொழிலாளகளுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் எமது கட்சியின் சார்பில அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். புதியம் தமிழகம் கட்சியின் மாநில உயர்மட்ட குழு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. மேலும் கட்சி வளர்ச்சி பணிகளுக்கான துரித நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் கிராமப்புற மற்றும் நகரத்திலுள்ள ஏழை, எளியோரின் சொத்துக்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தி வந்தேன். நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவது பாராட்டிற்குரியது. இந்த நடவடிக்கைகள் தனிநபர், கட்சி என்று குறுகிவிடாமல் நில மோசடியில் ஈடுபட்டுள்ள அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள், பன்னாட்டு கம்பெனிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். தூத்துக்குடி மாவட்டம் மலைப்பட்டி, சில்லாகுளம், உள்ளிட்ட கிராமங்களில் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் தி.மு.க. முக்கிய பிரமுகர் உதவியோடு மோசடியாக பறிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுவருகின்ற மின் உற்பத்தி நிலையங்கள் 10ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை மோசடியாக ஏழை,எளியோரிடமிருந்து அபகரித்துள்ளன. மேலும் 500ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்துக்கோயில்கள், ஓடைகள், குளங்கள் உள்ளிட்ட பொது சொத்துக்களையும் ஆக்கிரமித்துள்ளனர். அந்த நிலங்களை தமிழக அரசு மீட்க வேண்டும், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். தமிழக ஆறுகளில் மணல் கொள்ளையடிக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 385ஒன்றியங்களில் 137 ஒன்றியங்கள் நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. தற்போதுள்ள சூழலில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பது மிக முக்கியம். வெள்ளப்பெருக்கு காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை குளங்கள், மற்றும் நீர் நிலைகளில் நிரப்ப அரசு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அரசு மீண்டும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் ஆற்றுநீரையோ, நிலத்தடி நீரையோ பயன்படுத்த தடைவிதிக்கவேண்டும். தொழிற்சாலைகள் கடல்நீரை சுத்திகரித்து பயன்படுத்த மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தவேண்டும். தமிழகத்தில் 39330 குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளையெல்லாம் அகற்றவேண்டும். சிறையில் இருப்பவர்களை கட்சி பிரமுகர்கள் என்ற அடிப்படையில் சந்திப்பது தவறு இல்லை. ஆனால் அவர்களை சந்திக்க செல்ல மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அரசு வாகனத்தை பயன்படுத்தியது தவறு. கல்வி கொள்கைகளை வகுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளை நீக்கிய பிறகு அவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்