முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.க்களுக்கு லஞ்சம்: அமர்சிங்கிடம் விசாரணை

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.23 - எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அமர்சிங்கிடம் நேற்று டெல்லி போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதும் மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்துவந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்றன. இந்த கட்சிகளிடத்தில் 72 எம்.பி.க்கள் இருந்ததால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனையொட்டி பாராளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது நம்பிக்கை ஓட்டு கோரப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுவதற்காக காங்கிரஸ் ஆதரவுடன் சமாஜ்வாடி கட்யின் பொதுச்செயலாளராக இருந்த அமர்சிங், எம்.பி.க்களுக்கு லஞசம் கொடுத்ததாக பாரதிய ஜனதா எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற்றபோது லஞ்ச பணத்தை கட்டுக்கட்டுகாக சபையில் காட்டினர். இதனால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதோடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதுதொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருந்தது. இதற்கு டெல்லி போலீசாரை சுப்ரீம்கோர்ட்டு கண்டித்தது. அதன்பிறகு சுறுசுறுப்படைந்த டெல்லி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன்பேரில் அமர்சிங்கின் உதவியாளர் உள்பட 2 பேர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு வரும்படி அமர்சிங்கிற்கும் கிரிமினல் நடைமுறை சட்டத்தின்படி போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்பேரில் நேற்று டெல்லி போலீசார் முன்பு அமர்சிங் ஆஜரானார். டெல்லியில் உள்ள கிரைம் பிராஞ்ச் அலுவலகத்திற்கு சொகுசு காரில் அமர்சிங் வந்தார். அவரிடம் நேற்று சரியாக 11 மணி அளவில் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். ஆனால் போலீஸ் விசாரணை அலுவலகத்திற்கு சென்ற அமர்சிங்கிடம் பேட்டி எடுப்பதற்காக பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்திருந்தனர். அவர்களை கண்டுகொள்ளாமல் போலீஸ் விசாரணை அலுவலகத்திற்குள் அமர்சிங் சென்றுவிட்டார். எம்.பி.க்களுக்கு லஞசம் கொடுக்கப்பட்டதில் அமர்சிங்கிற்கும் பாரதிய ஜனதா எம்.பி.க்களுக்கும் இடைத்தரகராக செயல்பட்ட சுஹைல் இந்துஸ்தானி என்பவர் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமர்சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்சேனாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்.பி. ரியோடி ராமன் சிங், பாரதிய ஜனதா எம்.பி. அசோக் ஆர்கல் மற்றும் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி ஆகியோரும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்